சென்னை: இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் உதயநிதி ஸ்டாலின் கூட்டணியில் உருவாகி நேற்றைய தினம் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ள படம் மாமன்னன்.
உதயநிதியின் கடைசிப் படமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்தப் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. இந்நிலையில் படம் கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது.
படத்தில் உதயநிதியுடன் வடிவேலு, பகத் பாசில் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் இணைந்து நடித்துள்ள நிலையில், படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பும் காணப்படுகிறது.
மனமுடைந்து பேசிய இயக்குநர் மாரி செல்வராஜ்: நடிகர்கள் உதயநிதி, வடிவேலு, பகத் பாசில் மற்றும் கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து நேற்றைய தினம் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ள படம் மாமன்னன். இந்தப் படத்தை இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். இவரது முந்தைய படங்களான பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய படங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள நிலையில் தற்போது உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்து மாரி செல்வராஜ் மாமன்னன் படத்தை இயக்கியுள்ளார்.
உதயநிதியின் கடைசி படம் என்பதால் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு காணப்பட்டது. அதற்கேற்ப படம் ரசிகர்களை ஏமாற்றாமல் வெளியாகியுள்ளது. முதல் பகுதியில் அதிரடியாக மாரி செல்வராஜின் படமாகவே வெளியாகியுள்ளதாகவும் படத்தில் வடிவேலு மிரட்டியுள்ளதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இடைவேளைக்கு முந்தைய காட்சி படத்திற்கு மிகப்பெரிய பலத்தை கொடுத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளன.
இந்நிலையில் இந்தப் படத்திற்காக முன்னதாக அதிக அளவிலான பிரமோஷன்களில் படக்குழுவினர் ஈடுபட்டனர். பெரிய அளவில் கட்அவுட்டுகள் உள்ளிட்டவை வைக்கப்பட்டன. இயக்குநர் மாரி செல்வராஜிற்கும் ஒரு திரையரங்கில் பெரிய கட்அவுட் வைக்கப்பட்டதை பார்க்க முடிந்தது. இந்நிலையில், கமல்ஹாசனின் தேவர்மகன் குறித்த மாரி செல்வராஜின் பேச்சு, பெரிய அளவிலான சர்ச்சைகளையும் விமர்சனங்களையும் ஏற்படுத்தியது.
இந்நிலையில் பிரமோஷன்களின்போது தன்னுடைய பேச்சிற்கான விளக்கத்தையும் மாரி செல்வராஜ் கொடுத்திருந்தார். மூன்று படம் தானே எடுத்திருக்கிறாய், அதற்குள்ளாக இவ்வளவு பேச்சா என்பதுபோல தன்னிடம் கேள்வி எழுப்பப்படுவதாகவும், மூன்று படங்களாக இருந்தாலும் எந்தப்படமும் எடுக்காத இயக்குநராக இருந்தாலும் தன்னுடைய கருத்தை சொல்வதற்கு உரிமை உண்டு என்றும் மாரி செல்வராஜ் தன்னுடைய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
தான் ஓடும் ஓட்டத்திற்கு தான் இன்னும் எவ்வளவு நாட்கள் இருப்பேன் என்று தெரியவில்லை என்றும் அதனால் இன்று தோன்றுவதை இன்றே பேச வேண்டிய கட்டாயத்தில் தான் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். சில நேரங்களில் தன்னுடைய கருத்துக்கள் புரிந்துக் கொள்ளப்படாதபோது சினிமாவைவிட்டு வெளியேறத் தோன்றும் என்றும் தன்னுடைய ஊரில் தான் அனுபவித்த சுதந்திரம் குறித்தும் மாரி செல்வராஜ் பேசியுள்ளார்.