சண்டிகர், வட மாநிலங்களில் இருந்தபடி, நாடு கடந்த மற்றும் தேசிய அளவில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் தாதாக்களை கண்காணித்து ஒடுக்கும் வகையில், பஞ்சாப், ஹரியானா, சண்டிகர் போலீசாருடன் இணைந்து ஒருங்கிணைந்த கூட்டு நடவடிக்கை மேற்கொள்ள, என்.ஐ.ஏ., முடிவு செய்து உள்ளது.
நாட்டில் நிகழும் பயங்கரவாத சம்பவங்களை விசாரிக்க, என்.ஐ.ஏ-., எனப்படும் தேசிய புலனாய்வுக் குழுவை மத்திய அரசு உருவாக்கி உள்ளது.
புதுடில்லியிலிருந்து செயல்படும் இந்த அமைப்பின் தலைவர் டிங்கர் குப்தா தலைமையில், மாநிலங்களுக்கு இடையிலான ஒருங்கிணைந்த ஆலோசனைக் கூட்டம், ஹரியானாவின் பஞ்ச்குலாவில் நேற்று நடந்தது.
இதில், பஞ்சாப், ஹரியானா, சண்டிகர் உட்பட வட மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த போலீஸ் உயரதிகாரிகள் மற்றும் என்.ஐ.ஏ., உயரதிகாரிகள் பங்கேற்றனர்.
வட மாநிலங்களில் இருந்தபடி, தேசிய அளவில் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வரும் ரவுடிகள், தாதாக்களின் செயல்பாடுகள், அவர்கள் தொடர்பான வழக்குகளின் விசாரணைகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
அவர்களை ஒடுக்க பஞ்சாப், ஹரியானா, சண்டிகர் போலீசாருடன் இணைந்து ஒருங்கிணைந்த கூட்டு நடவடிக்கையை என்.ஐ.ஏ., மேற்கொள்வது குறித்தும் அப்போது முடிவு செய்யப்பட்டது.
இது குறித்து என்.ஐ.ஏ., மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:
நாடு கடந்தும், தேசிய அளவிலும் சமூக விரோத நடவடிக்கைகளை மேற்கொள்பவர்களை ஒடுக்க பஞ்சாப், ஹரியானா, சண்டிகர் போலீசாருடன் இணைந்து செயல்பட என்.ஐ.ஏ-., முடிவு செய்து உள்ளது.
இதற்காக அமைக்கப்படும் குழுவில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் மற்றும் மூன்று போலீஸ் படை அதிகாரிகள் இடம்பெறுவர்.
இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க மாதாந்திர ஆலோசனைக் கூட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்