தமிழ்நாட்டின் 49ஆவது தலைமைச் செயலாளராக சிவ்தாஸ் மீனா பதவியேற்றுக் கொண்டார். தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் சிவ் தாஸ் மீனா பதவியேற்ற நிலையில் இரண்டு ஆண்டுகளாக தலைமைச் செயலாளராக பணியாற்றிய இறையன்பு தனது பொறுப்புகளை சிவ்தாஸ் மீனாவிடம் ஒப்படைத்தார்.
இறையன்பு இன்று ஓய்வுபெறுவதை முன்னிட்டு அவரது எழுத்து, பேச்சு, செயலால் ஊக்கம் பெற்ற பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவிக்க தலைமை செயலகத்திற்கு வந்த வண்ணம் இருந்தனர்.
புதிதாக பொறுப்பேற்ற தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா மற்றும் அதிகாரிகள், அரசு ஊழியர்கள் இறையன்புவை வழியனுப்பி வைத்தனர்.
முன்னதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து இறையன்பு, சிவ்தாஸ் மீனா, சைலேந்திர பாபு, சங்கர் ஜிவால், சந்தீப் ராய் ரத்தோர் ஆகியோர் வாழ்த்து பெற்றனர்.
சிவ்தாஸ் மீனா பின்னணி!
ராஜஸ்தானை பூர்வீகமாக கொண்ட சிவ்தாஸ் மீனா 1989ஆம் ஆண்டு ஐஏஎஸ் பேட்ச்சை சேர்ந்தவர். ஜெய்ப்பூரில் பொறியியல் படிப்பு படித்தவர். ஜப்பானில் சர்வதேச ஆய்வுகளில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஐஏஎஸ் பணி அனுபவம் கொண்டவர்.
சல்யூட் அடித்த சைலேந்திர பாபு
தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 4 செயலாளர்களில் ஒருவராக பணியாற்றினார். பின்னர் சிவ்தாஸ் மீனா டெல்லி சென்று ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகத்தில் பணியாற்றினார். மு.க.ஸ்டாலின் 2021ஆம் ஆண்டு முதல்வராக பதவியேற்ற பின்னர் மீண்டும் தமிழ்நாட்டிற்கு அழைத்து வரப்பட்டார்.
நகராட்சி நிர்வாகத் துறை முதன்மைச் செயலாளராக பதவி வகித்து வந்த அவர் நேர்மையான, திறமை வாய்ந்த அதிகாரியாக பார்க்கப்படுகிறார். இதற்கு முன்னர் கொடுக்கப்பட்ட துறைகளை சிறப்பாக வழிநடத்திய அவர் தலைமைச் செயலாளர் பொறுப்பையும் திறம்பட செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.