புதுடெல்லி: உத்தர பிரதேச அரசு பேருந்துகளை இயக்க 17 பெண் ஓட்டுநர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர்.
பாஜக ஆளும் உ.பி. மாநில அரசின் சாலை போக்குவரத்து கழக (யுபிஎஸ்ஆர்டிசி) ஓட்டுநர் பயிற்சி நிலையம் கான்பூரில் உள்ளது. இங்கு பேருந்துகளை பராமரிக்க மெக்கானிக் மற்றும் ஓட்டுநர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. அசோக் லேலண்ட் மற்றும் டாடா நிறுவன பொறியாளர்கள் பயிற்சி அளித்து வருகின்றனர். இதுவரை, 460 மெக்கானிக்குகளும், 2,393 ஓட்டுநர்களுக்கும் இங்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
இவர்களில் 17 பெண்களுக்கும் கடந்த 2021 ஜுலை முதல் ஓட்டுநர்களுக்கானப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இவர்களுக்கு பயிற்சியின் போது ரூ.6,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த 17 பேரும் பயிற்சி முடித்து வரும் ஜனவரி முதல் அரசு பேருந்து ஓட்டுநர்களாகப் பணியில் சேர உள்ளனர்.
இதுகுறித்து ’இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் யுபிஎஸ்ஆர்டிசி நிர்வாக அலுவலக வட்டாரம் கூறும்போது, ‘‘மூன்று ஆண்டு பயிற்சிக்கு பின் பெண் ஓட்டுநர்களுக்கு ‘ஹெவி டிரைவிங்’ ஓட்டுநர் உரிமம் அளிக்கப்படும். இப்பயிற்சியில் சேர 8-ம் வகுப்பும், 5 அடி 3 அங்குல உயரம் மட்டுமே தகுதி. வயது வரம்பு 55 வரை என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பணியின் போது பெண்கள் பாதுகாப்புக்காக அவர்களுக்கு இரவு நேரங்களில் பணியாற்ற விலக்கு அளிக்கப்பட உள்ளது’’ என்று தெரிவித்தனர்.
லக்னோ உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பேருந்துகள் பல ஆண்டுகளாகவே இல்லாத நிலை இருந்தது. ஷேர் ஆட்டோ, ஜீப் மற்றும் குதிரை வண்டிகளே பொதுமக்கள் போக்குவரத்துக்கு உள்ளன. தற்போது, அலிகர் போன்ற சிறிய நகரங்களிலும் ஓரிரு நகரப் பேருந்துகள் அரசு சார்பில் விடப்பட்டுள்ளன. இவற்றில் துவக்கம் முதலாகவே அதிக எண்ணிக்கையில் பெண்களை ஓட்டுநர்களாக நியமிக்க முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். அதன்படி கடந்த சில ஆண்டுகளாக உ.பி. அரசு பேருந்துகளில் பெண் ஓட்டுநர்கள் நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகின்றனர்.