சென்னை: மாமன்னன் படத்தை ரிலீஸ் செய்து விட்டு ஏகப்பட்ட தீயை சைலன்ட்டாக பற்ற வைத்திருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.
மாமன்னன் படத்தில் வடிவேலுவின் கதாபாத்திரம் அதிமுகவின் முன்னாள் சபாநாயகர் தனபால் தான் என பலரும் க்ளைம் செய்து வர, அப்போ சேலத்தில் மாவட்ட செயலாளராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி தான் வில்லன் பகத் ஃபாசிலா என்கிற கேள்வி கிளம்பி உள்ளது.
மாமன்னன் படம் அதிமுகவின் அடையாளமாக உருவாகி உள்ளது என சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்த அதிமுகவினருக்கு ஆப்பு வைக்கும் விதமாக அந்த ட்வீட்டையும் ரீட்வீட் செய்து ரியாக்ட் செய்திருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.
பன்றி டாட்டூ: உதயநிதி ஸ்டாலின் பன்றிகளை மேய்க்கும் நபராக காட்டப்படுகிறார். மேலும், அவர் கையில் பன்றி டாட்டூ குத்தப்பட்டிருக்கிறது. பன்றிக்கு றெக்கை முளைத்தால் எந்த பிரச்சனையும் இல்லை என பேசுகிறார்.
தனது பன்றிகளை வேட்டை நாய்கள் கொன்று விட நாய்களை எதிர்க்கும் பன்றியை ஓவியமாக வரைகிறார். இப்படி ஏகப்பட்ட காட்சிகளை வைத்து அருந்ததியர்களின் வாக்குகளை அள்ளுவதற்கான அரசியலை உதயநிதி செய்துள்ளார் என விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டு வருகின்றன.
தனபால் தான் ரியல் மாமன்னன்: மாமன்னன் படத்தில் வடிவேலு நடித்த கதாபாத்திரம் அதிமுகவின் முன்னாள் சபாநாயகர் தனபால் தான் என ஒரு கூட்டம் கருத்துக்களை போட்டு வருகிறது.
இதில், ஒரு படி மேலே சென்று தனபாலே இது எல்லாம் ஜெயலலிதாவுக்கு கிடைத்த பெருமை என கொண்டாட்ட மனநிலைக்கே வந்து விட்டார். அப்போது, தனபாலை அடக்கி ஒடுக்கியதாக காட்டப்படும் அந்த ஆதிக்க சாதி மனநிலை கொண்ட மாவட்ட செயலாளர் யார் என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.
எடப்பாடி தான் பகத் ஃபாசிலா: “தனபால்தான் மாமன்னன் என்று முடிவெடுத்த ஊடகங்கள் அவர் அங்கே இருந்த காலத்தில் அந்த மாவட்ட செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்பதையும் பதிவு செய்து, எடப்பாடி அவர்களையும் பேட்டி எடுத்து ‘நீங்க இப்படிதான் நாயெல்லாம் அடிச்சு கொன்னீங்களா என்று கேட்க முன்வரவேண்டும்.” என அதிஷா என்பவர் ட்வீட் போட்டுள்ளார்.
உதயநிதி ரியாக்ஷன்: அந்த ட்வீட்டையே தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்து ஸ்மைலி எமோஜி ஒன்றையும் போட்டு சிரித்து வைத்துள்ளார் உதயநிதி ஸ்டாலின். இது என்னப்பா செம பொலிடிக்கல் கேமா இருக்கே என கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன. பகத் ஃபாசிலின் ரத்தின வேல் பெயரில் வேல் உள்ளது. அதே போல பழனி முருகரின் அடையாளம் வேல் என்றும் பழனிச்சாமி என்கிற பெயரை குறிக்கத்தான் ரத்தின வேல் என்கிற பெயரையே மாரி செல்வராஜ் வைத்துள்ளதாக சோஷியல் மீடியாவில் ஏகப்பட்ட டீகோடிங் நடைபெற்று வருகின்றன.