மதுரை:
மதுரையில் கட்டப்பட்டு வந்த பிரம்மாண்ட கலைஞர் நூற்றாண்டு நூலகம் எப்போது திறக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த நூலகத்தில் இருக்கும் வசதிகளை பார்க்கும் போது, இது உண்மையிலேயே மதுரை மக்களுக்கு கிடைத்த வரம் என்றுதான் சொல்ல தோன்றுகிறது.
மதுரை மக்களுக்கு இது பொற்காலம் போல இருக்கிறது. சமீபகாலமாக அரசாங்கத்திடம் இருந்து அடுத்தடுத்து வரும் அறிவிப்புகள் தூங்கா நகரத்தையே திக்குமுக்காட வைக்கின்றன. மதுரையில் மெட்ரோ ரயிலுக்கான திட்ட அறிக்கை 90 சதவீதம் முடிந்துவிட்ட நிலையில், அடுத்தக்கட்ட வேலைகள் தொடங்கி விட்டன.
அதேபோல, பெங்களூருக்கு நிகரான தொழில்நுட்ப பூங்காவாக மதுரையை மாற்றும் வகையில் அங்கு மிகப்பெரிய டைடல் பார்க்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அதேபோல, பெரிய பெரிய ஐடி நிறுவனங்களும் மதுரையை குறிவைத்து அடுத்தகட்ட பாய்ச்சலுக்கு ரெடியாகி வருகின்றன.
கலைஞர் நூற்றாண்டு நூலகம்:
அந்த வகையில், தற்போது மற்றொரு குட்நியூஸ் மதுரையன்ஸை தேடி வந்துள்ளது. மதுரை புது நத்தம் சாலையில் 2 லட்சம் சதுர அடி பரப்பளவில் மிக பிரம்மாண்டமாக கலைஞர் நூற்றாண்டு நூலகம் கட்டப்பட்டு வந்தது. ஆசியாவில் இரண்டாவது மிகப்பெரிய நூலகமாக சென்னை அண்ணா நூலகம் இருக்கும் நிலையில், இதற்கு அடுத்தபடியாக பெரிய நூலகமாக கலைஞர் நூற்றாண்டு நூலகம் அமைக்கப்பட்டு வருகிறது. ரூ.134 கோடியில் பார்க்கவே பிரமிப்பை ஏற்படுத்தும் வகையில் கட்டப்பட்டுள்ள இந்த நூலகத்தின் 99 சதவீத பணிகள் முடிவடைந்துவிட்டதாக பொதுப்பணித்துறை உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திறக்கும் தேதி:
கட்டுமானத்தால் ஏற்பட்ட குப்பைகளை சுத்தம் செய்வது, சில பைப்பிங் வேலைகளை சரிசெய்வது என மிகச்சில பணிகள் மட்டுமே மீதமுள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் பணிகள் இன்னும் ஒரு வாரத்துக்குள் முடிவடைந்துவிடும் எனக் கூறும் பொதுப்பணித்துறை அதிகாரிகள், ஜூலை 15-ம் தேதி கலைஞர் நூற்றாண்டு நூலகம் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும் என ஹேப்பி நியூஸை சொல்லி இருக்கிறார்கள். தமிழக அரசிடம் இருந்து இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகாகவில்லை.
பிரம்மாண்டத்தின் உச்சம்:
மொத்தம் 2 லட்சம் சதுர அடி பரப்பளவில் 6 தளங்களை கொண்டதாக இந்த கலைஞர் நூற்றாண்டு நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு வைப்பதற்காக ரூ.60 கோடியில் 3.5 லட்சம் புத்தகங்கள் வாங்கப்பட்டுள்ளன. ரூ.17 கோடிக்கு இருக்கைகள், மேஜைகள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டிருக்கின்றன. ரூ.5 கோடிக்கு கம்ப்யூட்டர்கள் உள்ளிட்ட தொழில்நுட்ப சாதனங்கள் வாங்கப்பட்டுள்ளன. 17 மாதங்களில் ரூ.134 கோடி செலவில் இந்த நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.
எந்தெந்த மாடியில் என்னென்ன?
இந்தக் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் தரைதளம் (Ground Floor) மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இங்கு மிகப்பெரிய கான்ஃப்ரன்ஸ் ஹாலும் (Conference Hall), கலை அரங்கமும் அமைந்துள்ளது. முதல் தளத்தில் மறைந்த முதல்வர் கருணாநிதியின் புத்தகங்கள், குழந்தைகளுக்கான தியேட்டர், அறிவியல் சாதனங்கள், செய்தித்தாள்களுக்காக பெரிய அறை ஆகியவை உள்ளன. இரண்டாம் தளத்தில் தமிழ் புத்தகங்கள் இருக்கின்றன. மூன்றாம் தளத்தில் ஆங்கில புத்தகங்களும், ஆராய்ச்சி தாள்களும் வைக்கப்பட்டிருக்கின்றன.
கண்கவர் மாடித்தோட்டம்:
4-வது தளத்தில் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு தேவையான புத்தகங்கள் உள்ளன. இந்த தளத்தில்தான் மாடி தோட்டம் அமைந்துள்ளது. இங்கு பராமரிக்கப்படும் இயற்கையான செடி, கொடிகளை பார்த்துக் கொண்டே திறந்தவெளியில் புத்தகம் படிக்கலாம். 5-வது தளத்தில் மிக அரிதான புத்தகங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. இங்கு டிஜிட்டல் நூலகமும் இருக்கிறது. 6-வது தளத்தில் நூலக அலுவலகம் அமைக்கப்பட்டிருக்கிறது.