முதல் தலைமுறை பட்டதாரியா நீங்க… உங்களுக்குதான் இந்த ஜாக்பாட்!

ஆண்டுதோறும் தமிழகத்தில் லட்சக் கணக்கான இளைஞர்கள் பட்டப்படிப்பு முடித்து விட்டு வெளியே வருகிறார்கள். பட்டப்படிப்பு முடித்தவர்களில் பலர் அரசு வேலைக்கு முயற்சி செய்து வருகின்றனர். சிலர் கிடைக்கும் தனியார் நிறுவன வேலைகளில் சேர்ந்து பணியாற்றி வருகின்றனர்.

தமிழக அரசு நிர்வாகத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் ஆண்டுதோறும் குருப் 4, குரூப் 2, குரூப் 2ஏ, குரூப் 1 போன்ற போட்டித் தேர்வுகளின் மூலம் கல்வி தகுதி அடிப்படையில் நிரப்பப்படுகிறது.

இந்நிலையில் அரசுப் பணிகளில் முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் என்பது குறித்து தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளைத் தமிழக அரசு அரசாணையாக தற்போது வெளியிட்டுள்ளது.

அந்த அரசாணையில், “மனித வள மேலாண்மைத்துறையின் 2021-2022-ம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை தொடர்பான உரையின்போது, அமைச்சர் (நிதி, மனிதவள மேலாண்மை) அவர்களால், வேலைவாய்ப்பகங்கள் வழியாக நிரப்பப்படுகின்ற அரசுப் பணியிடங்களில் பின்வரும் இனத்தவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என சட்டமன்ற பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதன்படி கொரோனா தொற்றால் பெற்றோர் இருவரையும் இழந்த இளைஞர்கள், முதல் தலைமுறைப் பட்டதாரிகள் , தமிழக அரசுப் பள்ளிகள் தமிழ் மொழியில் பயின்ற நபர்கள் ஆகியோருக்கு 2010-2011-ம் கல்வியாண்டு முதல் இதுவரை பட்டதாரிகளே இல்லாத குடும்பத்திலிருந்து ஒற்றைச்சாளர முறையில் தொழிற்கல்வி பயில தேர்வுபெற்ற மாணவர்களுக்கு சாதிப் பாகுபாடின்றியும், வருமானத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமலும், அம்மாணவர்கள் செலுத்த வேண்டிய கல்வி கட்டணம் முழுவதையும் சில நிபந்தனைகளுடன் அரசே ஏற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அரசு பணியிடங்களில் முதல் தலைமுறை பட்டதாரிகள், கொரோனா தொற்றால் பெற்றோர் இருவரையும் இழந்த இளைஞர்கள் மற்றும் தமிழக அரசுப் பள்ளிகளில் தமிழ் மொழியில் பயின்ற நபர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதற்காக இவ்வரசாணை வெளியிடப்பட்டுள்ளது. முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் வழங்குவது தொடர்பான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.