புதுடெல்லி: தக்காளி விலையை குறைக்க புதுமையான யோசனைகளை தெரிவிக்குமாறு மத்திய அரசு பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
கடந்த சில வாரங்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தக்காளி விலை அதிகரித்து வருகிறது. தக்காளி உற்பத்தி குறைந்தது, கனமழை காரணமாக பயிர்கள் சேதமடைந்தது போன்றவை தக்காளி விலை உயர்வுக்குக் காரணங்கள் என சொல்லப்படுகின்றன. இதுபோன்ற காரணங்களை எவ்வாறு கையாள்வது, தக்காளி விலை உயராமல் எவ்வாறு பார்த்துக்கொள்வது, தக்காளி விவசாயிகளுக்கு உரிய விலை கிடைப்பதை எவ்வாறு உறுதி செய்வது போன்றவை தொடர்பாக பொதுமக்கள் தங்கள் ஆலோசனைகளை தெரிவிக்கலாம் என மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை செயலர் ரோஹித் குமார் சிங் தெரிவித்துள்ளார்.
‘தக்காளி கிராண்ட் சேலஞ்ச் ஹேக்கத்தான்’ எனும் மக்கள் கருத்தறியும் மத்திய அரசின் இந்த முயற்சியில் மாணவர்கள், ஆராய்ச்சி அறிஞர்கள், ஆசிரியர்கள், தொழில்துறையினர், ஸ்டார்ட் அப்கள், தொழில் வல்லுநர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கலாம் என்று தெரிவித்துள்ள ரோஹித் குமார் சிங், கல்வி அமைச்சின் புத்தாக்கப் பிரிவுடன் இணைந்து நுகர்வோர் விவகாரத் துறையால் ஹேக்கத்தான் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார். இதற்கு முன் வெங்காயம் விலை அதிகரித்தபோதும் இதேபோன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும், வெங்காய விலையை கட்டுப்படுத்துவது தொடர்பாக 13 யோசனைகளை அமைச்சகம் பெற்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
“நாட்டின் வெவ்வேறு பிராந்தியங்களில் வெவ்வேறு காலகட்டங்களில் தக்காளி உற்பத்தி நடக்கிறது. நடவு மற்றும் அறுவடை பருவங்களின் இந்த சுழற்சி வேறுபாடுதான் ஒவ்வொரு பருவத்திலும் தக்காளி விலைக்கு முக்கிய காரணமாக இருக்கின்றன. பருவநிலையைத் தவிர, தற்காலிக விநியோகச் சங்கிலியில் இருக்கும் இடையூறுகள், பாதகமான வானிலை காரணமாக பயிர்கள் சேதமடைவது போன்றவையும் திடீர் விலை உயர்வுக்குக் காரணமாக அமைகின்றன” என்று மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை செயலர் ரோஹித் குமார் சிங் தெரிவித்துள்ளார்.