'பிரான்ஸ் காவல்துறையில் இனவெறி தொடர்புடைய ஆழமான பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும்' – ஐ.நா. அறிவுறுத்தல்

பாரீஸ்,

பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகருக்கு உட்பட்ட நான்டர் புறநகரில் போக்குவரத்து நிறுத்தம் பகுதியில் விதிமீறி செயல்பட்டார் என்பதற்காக நீல் (வயது 17) என்ற சிறுவன் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த அந்த சிறுவன் உயிரிழந்து விட்டான்.

சிறுவன் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு திரைபிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் சிலரும் வருத்தமும், கண்டனமும் தெரிவித்தனர். இந்த சம்பவம் பிரான்ஸ் மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. நாடு முழுவதும் பல இடங்களில் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் பல இடங்களில் வன்முறையாக வெடித்தது.

இதையடுத்து நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட 875 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். வன்முறை பரவாமல் கட்டுப்படுத்தும் நோக்கில் 40 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அதே சமயம், சிறுவனை சுட்டுக்கொன்ற காவலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பிரான்ஸ் கலவரம் குறித்து ஐ.நா. சபை கவலை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஐ.நா. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “பிரான்ஸ் தனது காவல் துறையில் இனப் பாகுபாடு தொடர்புடைய ஆழமான பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும். 17 வயது வட ஆப்பிரிக்க வம்சாவளி இளைஞன் பிரான்ஸ் காவல் துறையினரால் கொல்லப்பட்டது எங்களை கவலையடையச் செய்துள்ளது. பிரான்ஸ் அரசு இனவெறி மற்றும் இனப் பாகுபாடு தொடர்புடைய ஆழமான பிரச்சினைகளை தீவிரமாகக் கையாள வேண்டும்” என்று தெரிவித்துள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.