பாரீஸ்: பிரான்ஸ் நாடே கடந்த சில நாட்களாகப் பற்றி எரிந்து கொண்டு இருக்கிறது. 17 வயது சிறுவன் நஹெலை போலீசார் சுட்டுக் கொன்றதே இதற்குக் காரணம். ஒட்டுமொத்த நாட்டையும் கொதித்து எழ வைத்த இந்த சிறுவன் யார் என்பது குறித்து பார்க்கலாம்.
ஒட்டுமொத்த பிரான்ஸும் இப்போது பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. கடந்த சில நாட்களாக அங்கே மக்கள் போராட்டம் உச்சத்தில் இருக்கிறது. பல இடங்களில் இந்த போராட்டங்களில் கலவரமும் ஏற்பட்டுள்ளது.
நேற்று ஒரே நாளில் மட்டும் அங்கே 492 இடங்கள் சேதப்படுத்தப்பட்ட நிலையில், 2000 வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது.. இப்படி ஒட்டுமொத்த நாடும் கொந்தளிப்பில் இருக்கும் நிலையில், நிலைமையைக் கட்டுப்படுத்த அங்கே போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
பிரான்ஸ் போராட்டம்: இந்தளவுக்கு நிலைமை கையை மீறிச் செல்ல என்ன காரணம். இதற்குப் பின்னணி என்ன என்பது குறித்து பார்க்கலாம். பிரான்ஸ் நாட்டில் ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்த போலீசார் நஹெல் என்ற இளைஞரைத் தடுத்து நிறுத்தியுள்ளனர். அப்போது போலீசாரின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் அந்த சிறுவன் வாகனம் ஓட்டியதால், அவனைச் சுட்டுக் கொன்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இருப்பினும், இது தொடர்பாகப் பரவும் வீடியோ நேர்மாறாக இருக்கிறது.
இதில் இரண்டு அதிகாரிகளும் அந்த காருக்கு மிக அருகில் வந்து துப்பாக்கியை காட்டி அந்த சிறுவனை மிரட்டுகின்றனர். ஒருவர் துப்பாக்கியை எடுத்து நெற்றியில் வைத்து, “உன் தலையிலேயே நிச்சயம் தோட்டா பாயப் போகிறது” என்று மிரட்டுகிறார். இதனால் பயத்தில் அந்த சிறுவன் திடீரென காரை எடுத்துவிட்டுக் கிளம்பவே அந்த அதிகாரி சுட்டுள்ளார். இதில் அந்த சிறுவன் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை அங்கே நடந்துள்ளது.இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
உண்மை என்ன: போராட்டம் உச்சமடைய இந்த வீடியோவும் முக்கிய காரணம். ஒட்டுமொத்த பிரான்ஸ் நாட்டையும் வீதியில் இறங்கிப் போராட வைத்துள்ள அந்த சிறுவன் யார் என்பது குறித்துப் பார்க்கலாம். குறைந்த வருமானம் கொண்ட பகுதிகள், கறுப்பினத்தவர் வாழும் பகுதிகளில் போலீசார் அத்துமீறி நடந்து கொள்வதாக நீண்ட காலமாகப் புகார் இருக்கும் நிலையில், நஹெலின் மரணம் மக்களுக்குக் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
போலீசார் சொல்லும் கதைக்கு நேர்மாறாக அந்த வீடியோ இருக்கிறது. இதனால் இதேபோல எத்தனை பொய்களை போலீசார் சொல்லி இருப்பார்களோ என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர். நஹெல் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய அதிகாரி இப்போது கொலை வழக்கில் (voluntary homicide) விசாரிக்கப்படுகிறார். ஆயுதத்தைப் பயன்படுத்தும் அளவுக்கு நிலைமை மோசமானதாக மாறவில்லை என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
யார் அந்த சிறுவன்: இருப்பினும், குற்றம் சாட்டப்பட்ட அந்த அதிகாரி, சிறுவன் யார் மீதாவது காரை மோதிவிடுவாரோ என்ற அச்சத்திலேயே துப்பாக்கியால் சுட்டதாகத் தெரிவித்துள்ளார். இருப்பினும், பொதுமக்கள் அதை ஏற்பதாக இல்லை.
உயிரிழந்த நஹெல் டெலிவரி பாயாக வேலை செய்து வந்தவர் என்பது மட்டும் உறுதியாகியுள்ளது. மேலும், அங்கே இருந்த ஒரு ரப்பி கிளப்பிலும் அவர் வீரராக இருந்தது தெரிய வந்துள்ளது. தனது ஒரே மகனை இழந்துவிட்டுத் தவிக்கிறார் அவரது தாயார் மௌனியா. அரபு வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பதாலேயே போலீசார் இப்படி அத்துமீறி நடந்துள்ளதாக அவர் கண்ணீருடன் தெரிவிக்கிறார்.