நடிகர் ரஜினிகாந்தின் மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யாவின் இயக்கத்தில் ‘லால் சலாம்’ திரைப்படம் உருவாகி வருகிறது. லைகா புரொடெக்சன்ஸ் தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். விக்ராந்த், விஷ்ணு விஷால், செந்தில், ஜீவிதா, ராஜசேகர் உள்ளிட்ட பலரும் இந்த திரைப்படத்தில் நடித்து வருகின்றனர். படப்பிடிப்பு நிறைவு பெறும் நிலையிலுள்ள இந்த ‘லால் சலாம்’ திரைப்படத்தில், ‘மொய்தீன் பாய்’ எனும் கேரக்டரில் கௌரவ தோற்றத்தில் நடிக்கிறார் ரஜினி.
செஞ்சி, திருவண்ணாமலை, பாண்டிச்சேரி பகுதிகளில் முதற்கட்ட படப்பிடிப்பு நடைபெற்றதை தொடர்ந்து, மும்பை பகுதியிலும் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்நிலையில், ரஜினிகாந்த் நடிக்கும் சிறப்பு போர்ஷன்கள் திருவண்ணாமலை சுற்றுவட்டார பகுதிகளில் எடுப்பதற்காக சில தினங்களுக்கு முன்பாக படக்குழு திருவண்ணாமலைக்கு விரைந்தது. அதன்படி திருவண்ணாமலைக்கு வந்திருந்த நடிகர் ரஜினிகாந்த், தனியார் மருத்துவமனையின் விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்து படப்பிடிப்பில் பங்கேற்று வருகிறார்.
‘லால் சலாம்’ படப்பிடிப்பைத் தொடர்ந்து, தனது மனதுக்கு நெருக்கமான திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயத்தில் ரஜினிகாந்த் வழிபாடு செய்வார் என்றும், கிரிவலம் செல்ல வாய்ப்புள்ளதாகவும் பரபரப்பாக தகவல்கள் பேசப்பட்டு வந்தன. இந்த நிலையில், நேற்றைய தினம் செஞ்சி அருகே உள்ள கோனைப் புதூர் பகுதியில் நடைபெற்ற படப்பிடிப்பில் நடித்த ரஜினிகாந்த், இன்று காலை திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயத்தில் திடீரென சுவாமி தரிசனம் செய்தார்.
அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. அப்போது பக்தர்களும், ரசிகர்களும் அவரை காண்பதற்காக அங்கு திரண்டனர். பின்னர் அங்கிருந்து புறப்பட்ட ரஜினிகாந்த், செஞ்சி அருகே நடைபெறும் படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.