தேர்வுக்குழு தலைவராகவும் முன்னாள் இந்திய வீரர்… இனியாவது விடிவுகாலம் பிறக்குமா?

Agit Agarkkar: இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் அஜித் அகர்கர் தனது ஆண்டு சம்பளத்தை ரூ.1 கோடியில் இருந்து கணிசமாக உயர்த்த பிசிசிஐ ஒப்புக்கொண்டதை அடுத்து, இந்திய ஆண்கள் சீனியர் அணிக்கான தேர்வுக் குழுவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Zee News நடத்திய ஸ்டிங் ஆபரேஷனைத் தொடர்ந்து தேர்வுக்குழு தலைவராக இருந்த சேத்தன் சர்மா ராஜினாமா செய்ததை அடுத்து, கடந்த பிப்ரவரி முதல் அந்த பதவி காலியாக உள்ளது. சிவசுந்தர் தாஸ் தற்போது இடைக்கால பொறுப்பாளராக செயல்பட்டு வருகிறார்.

டெல்லி அணியில் இருந்து விடுவிப்பு

அந்த வகையில், ஆண்கள் தேர்வுக் குழுவில் காலியாக உள்ள இடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்பதாக பிசிசிஐ அறிவித்திருந்தது. மேலும், கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 30) இதற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், கடைசி தேதி முடிவதற்கு முந்தைய நாளில் (ஜூன் 29) அகர்கர் அந்த பதவிக்கு விண்ணப்பித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அகர்கர் தொலைக்காட்சி வர்ணனையாளராகவும், ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் பயிற்சியாளர்களுள் ஒருவராக உள்ளார். 

போட்டியின்றி தேர்வா?

இருப்பினும், அகர்கர் மற்றும் ஷேன் வாட்சன் தங்கள் அணயில் இருந்து பிரிந்துவிட்டதாக கடந்த வியாழன் அன்று டெல்லி அணி அவர்களின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தது. அகர்கர் தனது வர்ணனைக் கடமைகளை தியாகம் செய்ததற்கு போதுமான இழப்பீடு வழங்கப்படும் என்று பிசிசிஐ அவருக்கு உறுதியளித்ததை அடுத்து வியாழக்கிழமை (ஜூன் 29) தனது விண்ணப்பத்தை அனுப்பியதாக அறியப்படுகிறது. இதற்கான காலக்கெடு வெள்ளிக்கிழமையுடன் முடிவடைந்த நிலையில், அதற்கு அகர்கர் மட்டுமே விண்ணப்பித்துள்ளார் என தெரிகிறது. எனவே, அவர் போட்டியின்றி தேர்வாவார் எனவும் கூறப்படுகிறது.

பிற உறுப்பினர்கள்

அகர்கர் 26 டெஸ்ட், 191 ஒருநாள் மற்றும் நான்கு டி20 போட்டிகளில் விளையாடி 2007 டி20 உலகக் கோப்பை வென்ற அணியிலும் இடம்பெற்றிருந்தார். தேர்வுக் குழுவின் மற்ற உறுப்பினர்கள், தாஸ் தவிர, சுப்ரோடோ பானர்ஜி, சலில் அன்கோலா மற்றும் ஸ்ரீதரன் ஷரத் ஆகியோர் ஆவர். ஒவ்வொருவருக்கும் ஆண்டுக்கு ரூ.90 லட்சம் ஊதியம் வழங்கப்படுகிறது.

கடந்த மாதம் பிசிசிஐ தொடர்பு கொண்ட பல முன்னாள் வீரர்கள், தங்களின் மற்ற வருமான ஆதாரங்களை விட ஊதியம் மிகவும் குறைவாக இருப்பதாக உணர்ந்ததால், பதவிக்கு விண்ணப்பிக்க தயங்கினார்கள். 60 வயது வரம்பைத் தளர்த்திய பிறகு, பிசிசிஐ திலீப் வெங்சர்க்கரைத் தொடர்பு கொண்டது, ஆனால் முன்னாள் இந்திய கேப்டன் திலீப் வெங்கசர்க்கர் வாரியத்தின் உச்சக் குழுவின் உறுப்பினர் பதவியை விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை என்பதால், அவர் இதற்கு விண்ணப்பிக்கவில்லை என கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | ஒரே ஓவரில் 4 விக்கெட்! புதிய உலக சாதனை படைத்த ஷாஹீன் அஃப்ரிடி!
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.