அமராவதி: மகாராஷ்டிராவில் 26 உயிர்களைப் பறித்த பேருந்து விபத்துக்கு டயர் வெடிப்போ அல்லது அதிவேகமோ காரணமாக இருக்க முடியாது என்று அமராவதி வட்டார போக்குவரத்து அலுவலக (ஆர்டிஓ) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவின் யவத்மாலில் இருந்து புனே நோக்கிச் சென்ற பேருந்து இன்று அதிகாலை 1.32 மணியளவில் விபத்துக்குள்ளானது. சம்ருத்தி மகாமார்க் விரைவுச் சாலையில் புல்தானாவில் அந்தப் பேருந்து திடீரென தீப்பிடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கி 26 பேர் உயிரிழந்தனர். காயங்களுடன் 7 பேர் உயிர் பிழைத்துள்ளனர்.
விபத்து குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் தேவிந்திர பட்னாவிஸ், “இந்த நேரத்தில் விபத்து நடந்த சாலையின் கட்டுமானத் தரம் குறித்து பேசுவது சரியில்லை. விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மனித தவறு அல்லது டயர் வெடித்து விபத்து நடந்திருக்கலாம். இப்போது எதுவும் கூற முடியாது. இதுபோன்ற அசம்பாவிதங்களை தவிர்க்க நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஸ்மார்ட் சிஸ்டம் பொருத்த திட்டமிட்டுள்ளோம். ஆனால், அதற்கு கால அவகாசம் எடுக்கும்” என்று கூறியிருந்தார். இந்நிலையில், ஆர்டிஓ அறிக்கையில் டயர் வெடிப்பால் விபத்து நிகழவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
ஆர்டிஓ அறிக்கையின் விவரம்: இந்த விபத்துக்கு டயர் வெடிப்பு காரணமாக இருக்காது என்று அமராவதி வட்டார போக்குவரத்து அலுவலக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், “சம்பவ இடத்தில் டயர் வெடிப்பால் சிதறிய ரப்பர் துண்டுகளோ, டயர் வெடித்ததற்கான தடங்களோ இல்லை. அதனால் டயர் வெடித்து விபத்து ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை.
மாறாக, சக்கரத்தின் டிஸ்க் நெளிந்திருந்ததே தவிர டயர் நெளியவே இல்லை. முன்பக்க டயர் சாலைத் தடுப்பின் மீது மிகப் பலமாக மோதியுள்ளது. இதனால் முன்பக்க அச்சு (ஆக்ஸில்) தொகுப்பு பேருந்தின் சேசிஸில் இருந்து நகர்ந்துவிட்டது. இதனால், பேருந்தில் முன்பகுதி சாலையில் உரசியது, இந்த உராய்வு வெப்பம் மற்றும் நெருப்பை தூண்டியது.
மேலும், பேருந்து இயங்கும் நிலையிலேயே இருந்ததால் இன்ஜின் ஆயிலும் கொதி நிலையில் இருந்ததால் நெருப்பு பற்ற தோதாக இருந்துள்ளது. பின்னர், பேருந்து இடதுபுறமாக சாய்ந்து இழுத்துச் செல்லப்பட்டுள்ளது. இது வெப்பத்தை மேலும் அதிகரித்து தீ பற்ற வழிவகுத்துள்ளது. பேருந்தின் வலதுபுறத்தில் தான் டீசல் டேங் இருந்தது. அது மீண்டும் சாலைத் தடுப்பில் மோதியது. இதனால் பேருந்தின் வெளிப்புறம் பிளந்தது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேருந்து அதிவேகமாக சென்றதா? பேருந்து அதிவேகமாக சென்றதால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றும் சில ஊகங்கள் எழுந்த நிலையில், ‘விபத்து நடந்த நெடுஞ்சாலைக்குள் பேருந்து இரவு 11.08 மணிக்கு நுழைந்துள்ளது. விபத்து அங்கிருந்து 152 கிலோ மீட்டர் தொலைவில் சரியாக அதிகாலை 1.32 மணிக்கு நடந்துள்ளது. அந்த தூரத்தைக் கடக்க மணிக்கு 70 கிலோ மீட்டர் வேகத்தில்தான் பேருந்து பயணித்துள்ளது. அதனால், விபத்துக்கு அதிவேகம் காரணம் இல்லை’ என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் தப்பியவர்களில் ஒருவர் கூறும்போது, “பேருந்து திடீரென சாலையின் வலதுபுறம் இருந்த இரும்புத் தூண் மீது மோதியது. இதனால் பேருந்து ஓட்டுநர் கட்டுப்பாட்டில் இருந்து விலகியது. இதனால் சாலைத் தடுப்பின் மீது மோதியது” என்றார்.
பயணியின் வேதனை சாட்சி: அதேபோல் விபத்தில் உயிர்பிழைத்த மற்றொரு பயணி கூறுகையில், “தீ பிடித்தவுடன் நானும் என் அருகில் இருந்தவரும் பக்கவாட்டு ஜன்னல் கண்ணாடியை உடைத்து வெளியேறினோம். இன்னும் சிலர் அதே ஜன்னல் வழியாக வெளியேறினர். ஆனால், எல்லோராலும் அவ்வாறாக வெளியேற முடியவில்லை.
தீ மளமளவென பற்றி எரிந்தது. அதனால் உள்ளே சிக்கியிருந்தவர்களால் வெளியேற முடியவில்லை. எங்கள் கண் முன்னே சக பயணிகள் தீயில் கருகுவதைக் கண்டு செய்வதறியாது கதறினோம். விபத்து நடந்த தருணத்தில் நிறைய வாகனங்கள் அவ்வழியாகச் சென்றன. ஆனாலும் பல வாகனங்கள் நிற்காமல் கடந்து சென்றன. நிறையபேர் உதவிக்கு வந்திருந்தால் இன்னும் ஒரு சிலரையாவது காப்பாற்றியிருக்கலாம். ஆனால் ஆறுதல் அளிக்கும்விதமாக விபத்து நடந்த சில நிமிடங்களிலேயே போலீஸாரும் தீயணைப்புத் துறையினரும் அந்தப் பகுதிக்கு வந்தனர்” என்றார்.
விபத்து நடந்த பகுதியைச் சேர்ந்த உள்ளூர்க்காரர் ஒருவர் கூறுகையில், “பிம்பல்குடா செல்லும் இந்தப் பகுதியில் அடிக்கடி விபத்து நேரும். உடனே உள்ளூர்காரர்கள் தான் உதவிக்குச் செல்வோம். இன்றும் அப்படியான அபயக் குரல் கேட்டே வந்தோம். ஆனால் அங்கே நாங்கள் பார்த்த காட்சிகள் கோரமாக இருந்தன” என்று கண்ணீர் மல்கக் கூறினார்.