தினேஷ் கார்த்திக் கடந்த ஐபிஎல் போட்டியில் சிறப்பாக விளையாடவில்லை. அதற்கு முந்தைய ஆண்டு அட்டகாசமாக விளையாடிய அவர் மீது இந்த ஐபிஎல் போட்டியில் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அவரால் சிறப்பாக விளையாட முடியவில்லை. கடந்த ஆண்டு டி20 உலக கோப்பையிலும் அவருக்கு இடம் கிடைத்தாலும், வயது மற்றும் இப்போதைய பார்ம் காரணமாக இனி இந்திய அணிக்கு தினேஷ் கார்த்திக்கிற்கு வாய்ப்பு கிடைப்பது அரிதாகிவிட்டது. இருந்தாலும் நம்பிக்கை இழக்காத தினேஷ் கார்த்திக், உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் மீண்டும் களமிறங்க திட்டமிட்டுள்ளார். இதன் மூலம் அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டிக்கு நன்றாக தயாராக முடியும் என தெரிவித்துள்ளார்.
தினேஷ் கார்த்திக் நம்பிக்கை
இது குறித்து அவர் பேசும்போது, விஜய் ஹசாரே போட்டியில் தமிழக அணிக்காக விளையாட வேண்டும் என விரும்புவதாக தெரிவித்துள்ளார். தமிழக அணி தேர்வாளர்களிடம் இது குறித்து பேச இருப்பதாக தெரிவித்துள்ள அவர், வெள்ளைப் பந்து கிரிக்கெட் போட்டியில் தன்னை தக்கவைத்துக் கொள்வது குறித்து அவர்களிடம் எடுத்துரைப்பேன் என்றும் கூறியுள்ளார். வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் போட்டிக்கு தயார்
38 வயதான கார்த்திக் கடந்த ஆண்டும் இந்தப் போட்டியில் பங்கேற்றார். சையது முஷ்டாக் அலி டிராபியிலும் விளையாட விரும்புவதாக கார்த்திக் கூறுகிறார். இந்த இரண்டு போட்டிகளிலும் விளையாடுவது அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டிக்கு தயாராகும் என அவர் நம்புகிறார். ஐபிஎல் போட்டிக்கு தயாராகும் வகையில் இரண்டு ஒயிட் பால் போட்டிகளிலும் விளையாட விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார்
உலகக் கோப்பையில் கார்த்திக்
தமிழகத்தைச் சேர்ந்த கார்த்திக், வரவிருக்கும் ஒருநாள் உலகக் கோப்பை-2023-ல் வர்ணனையாளராக இருப்பேன் என்று தெரிவித்துள்ளார். அதேநேரத்தில் தான் சையது முஷ்டாக் அலி டி20 போட்டியும் நடக்கிறது. இதனால், அந்த நேரத்தில் என்ன முடிவு எடுப்பார் என்பது சூழ்நிலை தான் முடிவு செய்யும். சமீபத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மோதிய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் தினேஷ் கார்த்திக் வர்ணனையாளராக இருந்தார். கார்த்திக் இதுவரை 26 டெஸ்ட், 94 ஒருநாள் மற்றும் 60 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார்.