விழுப்புரம்:
காடுவெட்டி குருவை விட்டு என்னை கேவலமாக பேச வைத்து ரசித்தவர்
என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர்
பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கருணாநிதியையும், ஸ்டாலினையும் ராமதாஸ் எப்படி பேசுவார் என்றும் திருமாவளவன் கூறியிருக்கிறார்.
விழுப்புரம் திரெளபதி அம்மன் கோயில் விவகாரம் தொடர்பாக
வழக்கறிஞர் பாலுவை, கடந்த மாதம் ஒரு பொதுக்கூட்டத்தில் திருமாவளவன் ஒருமையில் பேசினார். அவரது பேச்சு பாமகவினர் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுக்கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு திருமாவளவன் பேசியதாவது:
ஒத்தைக்கு ஒத்தை:
திருமாவளவன் என்ற தனிநபருக்கு எதிராக சித்ரா பெளர்ணமி என்ற பெயரில் ஒரு விழாவை நடத்தி, அதில் தமிழ்நாடு முழுவதும் உள்ள ஓபிசி (OBC) சங்கங்களின் தலைவர்களை உட்கார வைத்தார் ராமதாஸ். அந்த விழாவிலே, என்னை அவன் இவன் என ஒருமையில் பேசி, அந்தப் பயலே இந்தப் பயலே என கன்னாபின்னாவென அவர்களை பேச வைத்தார். காடுவெட்டி குருவை பேசவிட்டு ரசித்தார். நான் அதை கண்டுகொள்ளவே இல்லை. பொருட்படுத்தவே இல்லை. கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்திலே, “டேய் திருமாவளவா ஒத்தைக்கு ஒத்தை போட்டு பார்க்கலாம் வர்றியா..நேருக்கு நேர் மோதலாம்” என்றெல்லாம் காடுவெட்டி குரு பேசினார்.
கருணாநிதி, ஸ்டாலின்:
என்னை மட்டுமா.. இந்த நாட்டிலே 5 முறை முதல்வராக இருந்த முத்தமிழறிஞர் கலைஞரை பார்த்து மேளம் அடிக்கிற ஜாதி என்று பேசினார். இப்படி பெரிய பெரிய தலைவர்களை கூட ஜாதி பெயரை சொல்லி திட்டும் ஆட்களைதான் ராமதாஸ் உருவாக்கி வைத்திருந்தார். ராமதாஸே தனிப்பட்ட முறையில் கலைஞரை பற்றி பேசும் போது ‘மேளக்காரர்’ என்றுதான் பேசுவார். கலைஞர் என்று சொல்ல மாட்டார். தளபதி ஸ்டாலினை ‘மேளம் அடிக்கிறவர்’ என்றுதான் சொல்லுவார். அவன் இவன் என்றுதான் பேசுவார். ஜெயலலிதாவையும் ஒருமையில்தான் பேசுவார். அவரது வளர்ப்பு அப்படி.
காடுவெட்டி குரு:
என் வாழ்க்கையில் என்றைக்கும் யாரையும் ஒருமையில் பேச மாட்டேன். ஆனால் பாமக வழக்கறிஞர் பாலுவை அண்மையில் அப்படி நான் பேச நேர்ந்தது. எனக்கு ஜூனியர்தான். தம்பிதான். வயது குறைவானவர்தான். அதனால் அவரை அவன் இவன் எனக் கூறுவதில் தவறு இல்லை. ஆனாலும் அப்படி ஒருநாளும் நான் சொன்னதில்லை. காடுவெட்டி குரு என்னை எத்தனையோ முறை அவதூறாக பேசி இருக்கிறார். ஆனால் ஒருமுறை கூட அவரது பெயரை மேடைகளில் உச்சரித்தது இல்லை. இப்பொழுதுதான் உச்சரிக்கிறேன்.
ராமதாஸ் சொன்ன வார்த்தை:
அவர் என்னை அத்தனை கேவலமாக பேசிய போதிலும், 2011-இல் ஜெயங்கொண்டம் தொகுதியில் காடுவெட்டி குரு போட்டியிட்ட போது, அவருக்காக நான் ஓடோடிச் சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டேன். அந்த தொகுதியில் வெற்றி பெற்ற பிறகு, காடுவெட்டி குரு என்னிடம் உங்களால் தான் நான் வெற்றி பெற்றேன் எனக் கூறினார். காடுவெட்டி குரு மட்டுமல்ல.. மருத்துவர் ராமதாஸ் அவரது மகனின் வீட்டுக்கு என்னையும், ரவிக்குமாரையும் அழைத்து எங்களுக்கு தேநீர் கொடுத்து உபசரித்துக் கொண்டே சொன்ன வார்த்தை: “நாங்கள் போட்டியிட்ட 33 இடங்களில் 3 இடங்களில்தான் வெற்றி பெற முடிந்தது. இந்த 3 தொகுதிகளிலும்கூட நாங்கள் வெற்றி பெற்றதற்கு சிறுத்தைகளின் ஓட்டுதான் காரணம் என பூத் வாரியாக ஆய்வு செய்து சொன்னார் ராமதாஸ்.
கொலை செய்ய வந்தார்கள்:
எத்தனையோ வன்முறைகளுக்கு பிறகும் கூட, எவ்வளவோ ரத்தம் சிந்தியிருந்தும் கூட, ஈழத்துக்காகவும், ஈழத்தமிழர்களுக்காகவும், தமிழ்நாட்டுக்காகவும் மருத்துவர் ராமதாஸுடன் நாங்கள் கைகோர்த்திருக்கிறோம். அவருக்கு உயர்ந்த மதிப்பை நாங்கள் கொடுத்திருந்தோம். ஆனால், தர்மபுரி பிரச்சினைக்கு பிறகு அவ்வளவு பெரிய வன்முறையை தூண்டும் அரசியலை அவர் கையில் எடுத்தார். அந்த சமயத்தில்தான், வடசேரியில் சிலரை போலீஸார் கைது செய்தார்கள். அவர்களிடம் ஆயுதங்கள் இருந்தன. திருமாவளவனை கொலை செய்யவே நாங்கள் வந்தோம் என்று அவர்கள் கூறினார்கள். இவ்வாறு திருமாவளவன் பேசினார்.