டிஜிட்டல் பரிவர்த்தனை இந்தியாவின் அடையாளமாக மாறியுள்ளது: பிரதமர் மோடி

புதுடெல்லி: டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் இந்தியாவின் ஆதிக்கம், உலக அளவில் நமது அடையாளமாக மாறியுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இந்திய கூட்டுறவு காங்கிரசின் 17வது மாநாட்டை தொடங்கி வைத்து பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது அவர், “2014க்கு முந்தைய 5 ஆண்டுகளில் விவசாயத்துறைக்கு ரூ.90 ஆயிரம் கோடிக்கும் குறைவாகவே செலவிடப்பட்டது. ஆனால், பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டம் என்ற ஒரு திட்டத்தின் மூலம் மட்டுமே அதைப்போல மூன்று மடங்கு நிதி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் இந்த திட்டத்தின் மூலம் கோடிக்கணக்கான சிறு விவசாயிகள் நேரடியாக பலனடைந்து வருகிறார்கள். இடைத்தரகர்களின் குறுக்கீடு இல்லாமல் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் இந்த தொகை நேரடியாக வைப்பு வைக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் கடந்த 4 ஆண்டுகளில் ரூ.2.5 லட்சம் கோடி ரூபாய் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் இந்தியாவை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. இதன்மூலம், பலன்கள் பயனாளிகளை நேரடியாகச் சென்றடைகிறது. நமது நோக்கம், பணபரிவர்த்தனை என்பது பணத்தாள்களை சார்ந்தே இருக்கும் என்ற நிலையை ஒழிப்பதே. டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் இந்தியா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்தியாவின் அடையாளமாக உலகம் இதனைப் பார்த்து வருகிறது. டிஜிட்டலை கூட்டுறவுத்துறையிலும் இணைக்க வேண்டும்” என தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.