அகமதாபாத்: குஜராத் கலவரம் தொடர்பாக பொய் ஆதாரங்கள், சாட்சிகளை உருவாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் தீஸ்தா செதல்வாட்டின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த குஜராத் உயர் நீதிமன்றம், அவரை உடனடியாக சரணடையுமாறும் வலியுறுத்திய நிலையில், உச்ச நீதிமன்றம் இடைக்கால நிவாரணம் வழங்கியுள்ளது.
கடந்த 2002ம் ஆண்டு குஜராத் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் கலவரத்தை உருவாக்கியது. இக்கலவரத்தில் காங்கிரஸ் எம்பி ஈசான் ஜாப்ரி உட்பட பலர் கொல்லப்பட்டனர். கலவரம் தொடர்பாக வழக்கு விசாரணை தொடங்கியது. கடந்த 2002-ம் ஆண்டு நடந்த குஜராத் கலவரம் தொடர்பாக அப்போது மாநில முதல்வராக இருந்த, பிரதமர் மோடி மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கை சிறப்பு புலனாய்வுக்குழு மேற்கொண்டு விசாரித்தது.
அதில், நரேந்திர மோடி உள்ளிட்டோர் குற்றமற்றவர் என்று கூறி வழக்கிலிருந்து விடுவித்தது. இதனையடுத்து கலவரத்தில் உயிரிழந்த காங்கிரஸ் எம்பி ஈசான் ஜாப்ரியின் மனைவி ஜாகியா ஜாப்ரியும் சமூக செயற்பாட்டாளர் டீஸ்டா செதல்வாட் இருவரும் உச்சநீதிமன்றத்தை நாடினர். நீண்ட நாட்களாக நடைபெற்று வந்த இவ்வழக்கில் நரேந்திர மோடி உள்ளிட்டோரை விடுவித்தது சரி என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதன்பிறகு குஜராத் கலவரம் தொடர்பாக பொய் ஆதாரங்கள், சாட்சிகளை உருவாக்கியதாக டீஸ்டா செதல்வாட் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிகள் ஸ்ரீகுமார், சஞ்சீவ் பட் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, மூவரும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 25ஆம் தேதி கைது செய்யப்பட்டார்கள். விசாரணையில், இந்த கலவரம் குறித்து மாநில அரசு மீது அவதூறுகளை பரப்ப அரசியல்வாதியும், மூத்த காங்கிரஸ் தலைவருமான மறைந்த அகமது படேலிடம் இருந்து செதல்வாட் ரூ.30 லட்சம் பெற்றது தெரிய வந்துள்ளதாக மாநில அரசு கூறியது.
எனினும் டீஸ்டா செதல்வாட் கைது நடவடிக்கை நாடு முழுவதும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இடதுசாரிகள், காங்கிரஸ் மற்றும் இதர ஜனநாயக கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. சிறையில் அடைக்கப்பட்டிருந்த செதல்வாட் தனக்கு ஜாமீன் வழங்கும்படி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் அவருக்கு செப்டம்பர் 2-ம் தேதி இடைக்கால ஜாமீன் வழங்கியது.
பின்னர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட தீஸ்தா செதல்வாட் குஜராத் உயர் நீதிமன்றத்தை அணுகி ஜாமீன் கோரினார். அவருக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் குஜராத் உயர் நீதிமன்றம் ஜாமீனை நீட்டித்து வந்த நிலையில், ஜாமீனை நீட்டிக்க மறுத்து விட்டது. மேலும், தீஸ்தா உடனடியாக சரணடைய வேண்டும் என நீதிமன்றம் கூறியது. இதை எதிர்த்து உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் தீஸ்தா செடல்வால்ட் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
தனக்கு இடைக்கால ஜாமீன் வழங்கும்படி தீஸ்தா தாக்கல் செய்த இந்த மனுவை உச்ச நீதிமன்றம் மாலையே அவரச வழக்காக விசாரித்தது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பிரசாந்த் குமார், ஏ.எஸ். ஒஹா தலைமையிலான அமர்வு முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது தீஸ்தா செதல்வாட் உடனடியாக சரணடைய வேண்டும் என குஜராத் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவிற்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.
எனினும் இந்த வழக்கை கூடுதல் அமர்வுக்கு மாற்றியது. இதன்படி இந்த வழக்கை இரவு விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதிகள் பி.ஆர். கவாய், ஏ.எஸ். போபாண்ணா மற்றும் திபாங்கர் தத்தா ஆகிய 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு சிறப்பு விசாரணையின்போது இடைக்கால நிவாரணம் வழங்கி உத்தரவிட்டது. அதாவது, 7 நாட்கள் குஜராத் உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டு உள்ளது.