புதுடெல்லி: “மேக் இன் இந்தியா” திட்டத்தால் இந்திய பொருளாதாரம் வளர்ந்துள்ளது’’ என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.
மாஸ்கோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிபர் புதின் மேலும் கூறியுள்ளதாவது: பிரதமர் மோடி கடந்த 2014-ல் தொடங்கி வைத்த “மேக் இன் இந்தியா” திட்டம் உள்ளூர் உற்பத்தி, மேம்பாடு, தயாரிப்புகளின் ஒருங்கிணைப்பை ஊக்குவித்துள்ளது. இதற்காக, இந்தியாவில் உள்ள எனது பெரிய நண்பர் மோடியை பாராட்டியே ஆக வேண்டும். அவர் முன்னோக்கு பார்வையால் தொடங்கிய இந்த திட்டம் இந்தியப் பொருளாதாரத்தில் உண்மையிலேயே ஈர்க்கக்கூடிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. நல்ல திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துவது யாராக இருந்தாலும் அதனை பின்பற்றுவதால் எந்த தீங்கும் ஏற்பட்டு விடாது.
இந்தியாவை மதிப்புமிக்க முன்மாதிரியாக அங்கீகரித்து, மற்ற நாடுகளும் இதேபோன்ற உத்திகளை செயல்படுத்துவதை பரிசீலிக்க வேண்டும். மேற்கத்திய நாடுகளின் பொருளாதார தடைகளுக்கு இடையில் ரஷ்ய நிறுவனங்கள் புதிய வாய்ப்புகளை கவனத்துடன் தேர்வு செய்ய வேண்டும். இதன் மூலம் உள்ளூர் சந்தைக்கு மிகப்பெரிய ஆதரவை வழங்க முடியும். இவ்வாறு புதின் தெரிவித்தார்.
ஆட்டோ மொபைல், மருந்து, ஜவுளி, எலக்ட்ரானிக்ஸ் என 25 துறைகளில் “மேக் இன் இந்தியா” திட்டம் பிரதமர் மோடியால் 2014-ல் தொடங்கி வைக்கப்பட்டது. இந்தியா பொருளாதாரத்தை உலகளாவிய உற்பத்தி சக்தியாக இந்த திட்டம் மாற்றியது.
இந்தியா 3.7 டிரில்லியன் டாலர் மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் உலக பொருளாதாரத்தில் 5-வது இடம் வகிப்பது குறிப்பிடத்தக்கது.
உலகளாவிய நிறுவனங்களின் உற்பத்தி மையங்களை ஈர்ப்பதிலும், அன்னிய முதலீட்டை அதிகளவில் கவருவதிலும் இந்தியாவின் பரந்த நுகர்வோர் சந்தை முக்கிய பங்காற்றுகிறது.
பிரதமரிடம் பேச்சு: இதனிடையே, உக்ரைன் போர் நிலைமை, ரஷ்யாவில் அண்மையில் ஏற்பட்ட வாக்னர் ஆயுதக் குழுவினரின் கிளர்ச்சி நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் புதின் விவாதித்துள்ளார்.