தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தென் தமிழகம் மற்றும் கேரளாவை ஒட்டியுள்ள மாநிலங்களில் கடந்த சில நாட்காக நல்ல மழை பெய்து வருகிறது. சென்னையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு வரலாற்று மழை பெய்தது. சுமார் 27 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஜூன் மாதத்தில் கனமழை கொட்டி தீர்த்தது.
சென்னையில் 16 சென்டி மீட்டர் மழை பதிவானது. அதன்பிறகு ஓரு சில நாட்கள் மாலை நேரத்தில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்தது. ஆனால் கடந்த வாரம் முழுவதும் சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது.
இன்று காலை கூட வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் பிற்பகலுக்கு பிறகு வெயிலின் தாக்கம் குறைந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது. இந்நிலையில் தனியார் வானிலை அமைப்பான சென்னை ரெய்ன்ஸ் சென்னையில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை ரெய்ன்ஸ் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, தெற்கு வளைகுடாவில் உருவாகி வரும் சுழற்சியால் அடுத்த சில நாட்களுக்கு தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் குன்று பகுதிகளில் மாலைநேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தெரிவித்துள்ளார். மேலும் இந்த காலக்கட்டத்தில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே தெற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சி நிலவுவதாகவும், இதானல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக வட தமிழகம் மற்றும் தமிழகத்தின் டெல்டா பகுதிகளில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.