சென்னை: பாரதத்தையும், சனாதன தர்மத்தையும் பிரிக்க முடியாது எனஆளுநர் ஆர்.என்.ரவி, ஸ்ரீ ராகவேந்திரா சுவாமி மடத்தில் நடைபெற்ற பொன்விழா நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.
சென்னை திருவல்லிக்கேணி நஞ்சன்கூடு ஸ்ரீ ராகவேந்திரா சுவாமி மடத்தில் 50-ம் ஆண்டு பொன்விழா கொண்டாட்டம் மற்றும் மடத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடத்தின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு ஸ்ரீ ராகவேந்திர மடத்தின் பீடாதிபதி சுபுதேந்திரா தீர்த்தா சுவாமி தலைமை தாங்கினார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: தமிழகம் ஒரு புண்ணிய பூமியாகும். பல ரிஷிகளும், முனிவர்கள் வாழ்ந்த பூமி இது. அதேபோல் சனாதன தர்மம்தான் இந்த பாரதத்தை உருவாக்கியது. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வேதப்புரட்சி ஏற்பட்டபோது சனாதன தர்மம் பரவத் தொடங்கியிருக்கிறது. அந்தவகையில் பாரதம் என்று சனாதன தர்ம இலக்கியங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவுக்குதான் அறிமுகம் தேவைப்படுகிறது. ஆனால் பாரதத்துக்கு தேவையில்லை. இந்தியா என்ற பெயரை ஆங்கிலேயர்கள்தான் வழங்கினர். ஆயிரம் ஆண்டுகளாக அன்னியர் படையெடுப்பு, ஆட்சி என்று இருந்ததால், இந்தியா என்பது 1947-ல் பிறந்ததாக அனைவரும் எண்ணுகின்றனர். ஆனால் அது உண்மை அல்ல.
குருகுல முறை: இந்தியா என்னும் பாரதம் 10 ஆயிரம் ஆண்டுகள் பழமையான கலாசாரத்தை உடையது. இது இந்தியாவை தவிர வேறு எந்த நாட்டுக்கும் பொருந்தாது. இந்திய அரசியலமைப்பில் முதல் வரைபடமாக குருகுலம்தான் இருந்தது. அதுவே நம் சமுதாயத்தின் தொடக்கமாகும். அதேபோல் சனாதன தர்மம் அனைவரையும் உள்ளடக்கியது.
சனாதன தர்மம் என்பது பாகுபாடு பார்ப்பது, சமூக நீதிக்கு எதிரானது என்று யாராவது கூறினால், அதுமுற்றிலும் உண்மைக்கு புறம்பானது. இந்தியா, தமிழ்நாடு, சென்னை ஆகியவை சனாதன தர்மத்தால்தான் உயிர்ப்புடன் உள்ளன.பாரதத்தையும், சனாதன தர்மத்தையும் பிரிக்கவே முடியாது. சனாதன தர்மம் இல்லையென்றால், பாரதமும் இல்லையென்று கூற வேண்டும். பாரதம் இருந்தால் சனாதன தர்மமும் இருக்கும்.
வலிமையான நாடாக…: ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்பதையே சனாதன தர்மம் பேசுகிறது. அதன் அடிப்படையில் நாம்அனைவரும் ஒன்றே. வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் வித்தியாசம் இல்லை. பாரதம் வலிமையாகவும், திறன் வாய்ந்ததாகவும் இருக்க வேண்டும். இன்னும் 20 ஆண்டுகளில் உலகிலேயே வலிமையான நாடாக இந்தியா என்னும் பாரதம் மாறும்.சில ஆண்டுகளுக்கு முன்னர் வரைஇந்தியாவை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இன்று உலகமே இந்தியாவை உற்று நோக்குகிறது.
எனவே ஆன்மிக ரீதியாகவும் இந்தியா வலிமையாக இருக்கவேண்டிய காலம் இது. ஸ்ரீ ராகவேந்திர மடம் உள்ளிட்ட அமைப்புகளுக்கு அதற்கான மிகப்பெரிய பொறுப்பு இருக்கிறது. நவீன சமுதாயம் என்கிறோம். ஆனால் அரசிடமிருந்து எதையாவது எதிர்பார்த்து காத்திருக்கிறோம். நம் சமுதாயம் வலுவிழந்து இருக்கிறது. இந்தநிலை மாறவேண்டும். இளைஞர்களுக்கு ரிஷிகள், முனிவர்கள், பாரதத்தின் வரலாறு குறித்து தெரியப்படுத்த வேண்டியது அவசியமாகும். இவ்வாறு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார்.
இந்நிகழ்வில் குடியரசு தலைவர் விருது பெற்ற வித்வான் மகாமஹோபாத்யாயா ராஜா எஸ்.கிரியாச்சார்யா, சென்னை திருப்பதி தேவஸ்தான உறுப்பினர் சேகர் ரெட்டி, வழக்கறிஞர் செல்வி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.