சென்னை: அஜித் நடித்த ஆசை பட நாயகி சுவலட்சுமி இப்போது எப்படி எங்கு இருக்கிறார் என்று தெரியுமா.
கொல்கத்தாவில் பிறந்து வளர்ந்த சுவலட்சுமி, மேடைகளில் பாரம்பரிய நடனம் மற்றும் நாட்டுப்புற நடனம் ஆடுவதில் கை தேர்ந்தவராக இருந்தார். ஒரு மேடை நிகழ்ச்சியில் இவரின் நடனத்தை பார்த்த வங்காள இயக்குனர் சத்யஜித் ராய் உட்டோரன் என்ற வங்காளப்படத்தில் சுவலட்சுமியை கதாநாயகியாக அறிமுகப்படுத்தினார்.
சுவலட்சுமி நடித்த வங்காள திரைப்படம் 1994ம் ஆண்டு சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதை வென்றது. மேலும்,இப்படம் கேன்ஸ் திரைப்படவிழாவிலும் திரையிடப்பட்டது.
ஆசை படத்தில்: நடிகை சுவலட்சுமி அறிமுகமான முதல் படமே நல்ல பெயரை பெற்றுக்கொடுத்ததால், இவர் தமிழில் முதன் முதலாக 1995 ஆம் ஆண்டு வெளியான ‘ஆசை’ படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடித்திருந்தார். பிளாக் பஸ்டர் ஹிட்டடித்த இத்திரைப்படம் வசூலை அள்ளியது. இந்த படத்தில் இடம் பெற்ற மீனம்மா அதிகாலையிலும் அந்தி மாலையிலும்…என்ற பாடலுக்கு ஏற்றால் போல சுவலட்சுமியின் கண் அவ்வளவு அழகாக இருக்கும்.
அடுத்தடுத்த படங்களில்: ஆசை படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கோகுலத்தில் சீதை, கல்கி, காத்திருந்த காதல், லவ் டுடே என அடுத்தடுத்த படங்களில் நடித்தார். நடிகர் விஜய்யின் திரைப்பயணத்தில் இந்த படத்திற்கு மிகமுக்கியமான பங்கு உண்டு. அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்த சுவலட்சுமி தமிழில் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.
சின்னத்திரையில்: குறுகிய காலத்திலேயே தமிழ்,தெலுங்கு, மலையாளம்,கன்னடம் என அனைத்து மொழிகளிலும் ரவுண்டு கட்டி நடித்து வந்தார் சுவலட்சுமி. இவரது நடிப்பு பாராட்டப்பட்டு வந்தாலும் இவருக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கின. இதனால் வெள்ளி திரையிலிருந்து சின்னத்திரைக்கு வந்த இவர் சூலம் என்ற ஒரு சில சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்தார்.
கலிபோர்னியாவில்: இதையடுத்து, நடிகை சுவலட்சுமி கலிபோர்னியாவைச் சேர்ந்த தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதன் பிறகு நடிப்பதில் இருந்து விலகிய சுவலட்சுமியை, ஜெயம்ரவி நடித்த சந்தோஷ் சுப்பிரமணியன் படத்தில் நடிக்க வைக்க இயக்குநர் எவ்வளவோ முயற்சி செயதார். ஆனால்,அதற்கு சுவலட்சுமி நோ சொல்லிவிட்டதால், அந்த கதாபாத்திரத்தில் கௌசல்யா நடித்திருந்தார். தற்போது சுவலட்சுமி தொழிலதிபரான தனது கணவருக்கு உதவியாக சொந்த நிறுவனத்தை நிர்வகித்து வருகிறார்.