புதுக்கோட்டை, சண்முக நகரைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (45). இரவு தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது திடீரென அங்கு வந்த மர்ம நபர்கள் 4 பேர், அவரை அரிவாளால் வெட்டிவிட்டு கண் இமைக்கும் நேரத்தில் தப்பித்துச் சென்றனர். இதில், படுகாயமடைந்த தமிழ்ச்செல்வன், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற புதுக்கோட்டை நகர் போலீஸார், தமிழ்ச்செல்வனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
கொலை நடந்த பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து போலீஸார் விசாரணை நடத்தினர்.
இதில், அவர்களின் அடையாளங்கள் கண்டறியப்பட்டிருக்கின்றன. முதற்கட்ட விசாரணையில், தமிழ்ச்செல்வனுக்கும், அவரின் உறவினர்களுக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. சொத்து தகராறில்தான், தமிழ்ச்செல்வன் படுகொலை செய்யப்பட்டது தெரியவந்திருக்கிறது. இது குறித்து போலீஸார் வழக்கு பதிந்து, தனிப்படை அமைத்து 4 பேர் கொண்ட கும்பலைத் தேடி வருகிறார்கள்.
புதுக்கோட்டையில் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தவர் கொலைசெய்யப்பட்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.