பழனிசாமியோடு மீண்டும் இணைய வாய்ப்பில்லை – மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு

சென்னை: பழனிசாமியோடு மீண்டும் இணைய வாய்ப்பில்லை, அதிமுகவை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

சென்னை, எழும்பூரில் உள்ள தனியார் ஓட்டலில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு அணியின் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமை வகித்தார்.

இதில், முன்னாள் அமைச்சர்கள் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், கு.ப.கிருஷ்ணன், சட்டப்பேரவை உறுப்பினர் ஐயப்பன், முன்னாள் எம்எல்ஏ ஜேசிடி பிரபாகர், அணியின் கொள்கை பரப்புச் செயலாளர்கள் பெங்களூரு புகழேந்தி, மருது அழகுராஜ், மகளிரணிச் செயலாளர் ராஜலெட்சுமி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும், அமைப்பு ரீதியான மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். கொங்கு மண்டலத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட மாநாடு குறித்து அப்பகுதியைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார்.

இதற்கிடையே மாநாட்டுக்கு செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம் சார்பில் தென்னரசு ரூ.10 லட்சம், கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி ரூ.10 லட்சம் நிதி வழங்குவதாக அறிவித்தனர்.

கூட்டத்தில் பண்ருட்டி ராமச்சந்திரன் பேசும்போது, ‘‘பாதகம் செய்த பழனிசாமியோடு பாதிக்கப்பட்ட பன்னீர்செல்வத்தால் எப்படி ஒன்றுசேர முடியும். ஒன்றாக இருந்தபோது சந்தித்த இன்னல்கள் ஓபிஎஸ்-ஸுக்கு நன்றாகத் தெரியும். சசிகலாவை சந்திக்க அனுமதி தந்தால் சந்திப்போம். இனி பழனிசாமியோடு உறவு கிடையாது. பாஜகவுடன் தோழமையாக இருப்போம்’’ என்றார்.

அதைத்தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வம் பேசும்போது, ‘‘அரசு கவிழும் சூழலில் நல்லெண்ண அடிப்படையில் பழனிசாமியுடன் ஒன்றிணைந்தோம். ஆனால் அந்த நன்றி இல்லாமல் அவர்கள் படுத்திய பாடு வார்த்தைகளால் விவரிக்க முடியாது. ஆட்சி இல்லாவிட்டாலும் அதிகாரம் இல்லாவிட்டாலும் மன தைரியம் உள்ளது. அதற்கு திருச்சி மாநாடே சான்று’’ என்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது: அடுத்த மாநாடு கொங்கு மண்டலத்தில் நடைபெறவுள்ளது. விரைவில் தேதி அறிவிக்கப்படும். கூட்டணியைப் பொருத்தவரை எங்களிடமும் பாஜக தலைவர்கள் பேசி வருகின்றனர். தேர்தலின்போது கூட்டணி அறிவிப்பை வெளியிடுவோம்.

கடந்த காலத்தில் பழனிசாமி அரசை காப்பாற்றினோம். அதற்குரிய செயல் அவரிடம் இல்லை. இனிமேலும் அந்தத் தவறை செய்யமாட்டோம். அமமுகவுடன் தோழமை உணர்வுடன் இணைந்திருக்கிறோம். நாங்கள் திமுகவின் பி டீம் அல்ல. ஏ முதல் இசட் டீம் வரை பழனிசாமிதான். அவர் எவ்வளவு நெருக்கமாக இருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும். அதிமுகவை யாராலும் குறைத்து மதிப்பிட முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பண்ருட்டி ராமச்சந்திரன் கூறும்போது, ‘‘திருச்சி மாநாட்டில் பழனிசாமி மற்றும் அவருடன் இருக்கும் நிர்வாகிகளை நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இவ்வாறு அடிப்படை உறுப்பினர்களால் நீக்கப்பட்டவர்களை சேர்க்க எங்களுக்கு அதிகாரம் இல்லை. அவர்களைத் தவிர மற்றவர்கள் வந்தால்சேர்த்துக் கொள்வோம். அமைச்சரை நீக்க அதிகாரம் இருக்கா இல்லையா? என்பது ஆளுநருக்கு தெரியவில்லை. அவரது நடவடிக்கை சரியா இல்லையா? என்பதுகுறித்து மத்திய அரசு தெளிவு படுத்தியுள்ளது’’ என்றார்.

ஓபிஎஸ் அணிக்கான நாளிதழ்: ஓபிஎஸ் அணியினருக்கான அதிகாரப்பூர்வ கட்சி நாளிதழ் தொடங்கப்படுவதாக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. ‘நமது புரட்சி தொண்டன்’ என்ற பெயரில் அணியின் கொள்கை பரப்புச் செயலாளர் மருது அழகுராஜ் நாளிதழைத் தொடங்கவுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.