பாலக்காடு; கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் மூணாறு பெட்டிமுடியில், 70 பேரை காவு வாங்கிய நிலச்சரிவில், உயிர் பிழைத்த சிலரில் ஒருவர் கோபிகா கணேசன். ஆக., 6, 2020ல் நடந்த பேரழிவு சோகம் இன்னும் ஆறாத காயமாக அவரது மனதில் உள்ளது.
இரவிகுளம் தேசிய பூங்காவில் ஓட்டுனராக பணிபுரிந்த தந்தை கணேசனையும், அங்கன்வாடி ஆசிரியையான அவரது தாய் தங்கத்தையும், அவர் இந்தப் பேரழிவில் இழந்தார்.
இருப்பினும், கோபிகா தனது பிளஸ் 2 வகுப்புகளில், முழு மன உறுதியுடன் முடித்து, கடந்த நவம்பரில் பாலக்காட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லுாரியில் தனது முதல் ஆண்டு எம்.பி.பி.எஸ்., படிப்பை துவங்கினார். மருத்துவராகி பெற்றோரின் ஆசையை நிறைவேற்றி, மருத்துவ சேவை செய்ய விரும்பும் கோபிகாவை வாழ்த்துவோம்!
இதுகுறித்து, கோபிகா கூறியதாவது:
நானும் என் அக்கா ஹேமலதாவும், திருவனந்தபுரம் பட்டம் மாதிரி அரசு மேல்நிலை பள்ளியில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பு படித்தோம்.
பத்தாம் வகுப்பு தேர்வில், 93 சதவீதமும், பிளஸ் 2வில், 96.25 சதவீதமும் பெற்று தேர்ச்சி அடைந்தேன்.
2020ல் நடந்த நிலச்சரிவின் அழிவை பார்த்த போது, நான் மருத்துவராக இருந்திருந்தால் சிறப்பாக சேவை செய்திருக்க முடியும் என்று நினைத்தேன். என்னை மருத்துவராக்க வேண்டும் என்பது என் பெற்றோரின் கனவு. அவர்களின் ஆசையை நிறைவேற்றுவேன் என்று நம்புகிறேன்.
பிளஸ் 2 படிப்பை முடித்த நான், பாலாவில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் சேர்ந்து நுழைவுதேர்வுக்கு தயாரானேன். ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் முறையான வழிகாட்டுதலுடன், 2022ல் நீட் தேர்வில் பங்கேற்று, பாலக்காட்டில் உள்ள மருத்துவக் கல்லுாரியில் சேர்ந்தேன்.
தனது பெற்றோர் இறந்ததால், குடும்பத்திற்கு இழப்பீடாக, 10 லட்சம் ரூபாய் கிடைத்தது. இந்த பணத்தின் ஒரு பகுதியை படிப்புகளுக்கு பயன்படுத்துகிறோம்.
பெட்டிமுடி துயரத்தில் உயிர் பிழைத்தவர்களின் கல்விச் செலவுக்கு அரசு நிதி உதவி வழங்கியது.
ஏழை எளிய மக்களுக்கு சேவை செய்வது என் விருப்பம். அதை நிறைவேற்றும் வகையில், செயல்படுவேன். பழங்குடியின நல அலுவலகத்தில் உதவித்தொகைக்காக விண்ணப்பித்துள்ளேன்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
கல்லுாரி முதல்வர் விஜயலட்சுமி கூறுகையில், ”நன்றாக படிக்கும் கோபிகா, மற்றவர்களுக்கு முன்மாதிரி. பழங்குடியின நலத்துறை இயக்குனர் அஞ்சு, கல்லுாரிக்கு வந்து அவரை சந்தித்து சென்றிருக்கிறார்,” என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்