மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு, பகத் பாசில், உதயநிதி நடிப்பில் கடந்த 29ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் `மாமன்னன்’.
அரசியல் கட்சிகள் மற்றும் தேர்தல் அரசியலில் இருக்கும் சாதிய அரசியலைப் பற்றிப் பேசும் இப்படம் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்நிலையில் இப்படத்தின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக சுமார் 55-60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள `Mini Cooper Countryman’ என்ற சொகுசுக் காரை இயக்குநர் மாரி செல்வராஜுக்கு ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பில் உதயநிதி பரிசாக அளித்துள்ளார்.
இதுபற்றி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள உதயநிதி, “ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக விவாதிக்கிறார்கள். தங்களுடைய எண்ணங்களைக் கதையுடனும் களத்துடனும் தொடர்புப்படுத்தி கருத்துகளைப் பகிர்கிறார்கள். உலகத் தமிழர்களிடையே விவாதத்துக்குரிய கருப்பொருளாக மாறியிருக்கிறது. அம்பேத்கர், பெரியார், அண்ணா, கலைஞர் போன்ற நம் தலைவர்கள் ஊட்டிய சுயமரியாதை உணர்வை, சமூகநீதி சிந்தனைகளை இளம் தலைமுறையினரிடம் விதைத்துள்ளது. வணிக ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி.
இதற்காக ‘ரெட் ஜெயண்ட் மூவிஸ்’ நிறுவனம் மாரி செல்வராஜ் சாருக்கு மினி கூப்பர் கார் வழங்கி மகிழ்ந்தது. உலகம் முழுவதும் பறக்க ‘மாமன்னன்’-க்கு றெக்கை அளித்த என் மாரி செல்வராஜ் சாருக்கு நன்றி” என்று பதிவிட்டு மாரி செல்வராஜைப் பாராட்டியுள்ளார்.
சமீப காலமாகத் திரைப்படம் வெற்றி பெற்றால் படக்குழுவினருக்கு காஸ்ட்லி கார், பைக், வாட்ச்சுகளைப் பரிசாக அளிப்பது ட்ரெண்டாகி வருகிறது. குறிப்பாக, கமல் ‘விக்ரம்’ படத்தின் வெற்றியைக் கொண்டாடி லோகேஷுக்கு ‘Lexus ES300h’ கார், சிறப்புத் தோற்றத்தில் நடித்த சூர்யாவுக்கு ரோலக்ஸ் வாட்ச் படத்தின் உதவி இயக்குநர்களுக்கு ‘Apache RTR 160’ பைக் எனப் பரிசுகள் கொடுத்திருந்தார். இதைத் தொடர்ந்து திரை வட்டாரத்தில் இருக்கும் பலரும் இதுபோல தங்கள் படக்குழுவினருக்குப் பரிசுகளை வழங்கி வருகின்றனர்.
கடந்த வாரம் கூட `இந்தியன் 2′ படப்பிடிப்பு நன்றாக வந்திருப்பதாக இயக்குநர் ஷங்கருக்கு காஸ்ட்லியான ‘PANERAI’ பிராண்ட் வாட்ச்சை பரிசாக வழங்கியிருந்தார் கமல்.
இந்நிலையில் தற்போது உதயநிதி, மாரி செல்வராஜுக்கு `Mini Cooper’ சொகுசுக் காரை பரிசளித்துள்ளது கோலிவுட் வட்டாரத்தில் பேசுபொருளாகி வருகிறது.