யார் இந்த அஜித் பவார்? தூக்கி கொடுத்த MP பதவியும், அடிச்சு உடைச்ச NCP கட்சியும்… ஷிண்டே பாலிடிக்ஸ்!

மகாராஷ்டிரா அரசியலில் சிவசேனா கட்சியை உடைத்து பாஜக உடன் கைகோர்த்து முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்தவர் ஏக்நாத் ஷிண்டே. இதன்மூலம் கட்சியை உடைக்கும் வாய்ப்புள்ள நபர்களை இன்னொரு ஷிண்டேவா? என்று கேட்கும் அளவிற்கு தேசிய அரசியலில் முக்கியத்துவம் பெற்றார். இந்நிலையில் இதே மாநிலத்தில் புதிதாக ஒரு ஏக்நாத் ஷிண்டே உதயமாகி இருக்கிறார். அவர் தான் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அஜித் பவார்.

தேசியவாத காங்கிரஸ் உடைந்தது

தனது ஆதரவு எம்.எல்.ஏக்கள் 9 பேருடன் வந்து ஆளும் சிவசேனா, பாஜக உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணியில் கைகோர்த்து துணை முதலமைச்சர் பதவியை வாங்கிவிட்டார். கூடவே தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கு அமைச்சர் பதவிகளை வாங்கி கொடுத்துள்ளார். இதை கட்சி தலைவர் சரத் பவார் சிறிதும் எதிர்பார்த்திருக்க மாட்டார். மீண்டு வருவோம் என்று சமாதானம் கூறினாலும் கட்சி இரண்டாக உடைந்ததை மறுக்க முடியாது.

யார் இந்த அஜித் பவார்?

இந்நிலையில் அஜித் பவாரின் பின்னணி குறித்து தெரிந்து கொள்வோம். காங்கிரஸ் கட்சியில் சரத் பவாரின் செல்வாக்கு படிப்படியாக கூடிக் கொண்டே சென்ற சமயத்தில் ஆரம்பக் கல்வியை படித்து கொண்டிருந்தார் அஜித் பவார். முதலில் நாசிக் மாவட்டத்தில் இருந்த இவர், பின்னர் மும்பைக்கு இடம்பெயர்ந்தார். 22 ஜூலை 1959ல் பிறந்த அஜித் பவார் தனது அரசியல் வாழ்க்கையில் முதன் முதலில் அடியெடுத்து வைத்தது 1982ஆம் ஆண்டு.

அரசியல் வாழ்க்கை தொடக்கம்

கூட்டுறவு சர்க்கரை ஆலை வாரிய உறுப்பினராக, புனே மாவட்ட கூட்டுறவு வங்கி தலைவராக அடுத்தடுத்து உயர்ந்தார். இதையடுத்து பாராமதி மக்களவை தொகுதியில் எம்.பியாக நின்று வெற்றி பெறும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அடுத்த முறை தனது சித்தப்பா சரத் பவாருக்காக அந்த தொகுதியை விட்டு கொடுத்தார். பின்னர் பாராமதி சட்டமன்ற தொகுதியில் நின்று எம்.எல்.ஏ ஆனார். இதே தொகுதியில் 1995, 1999, 2004, 2009, 2014 ஆகிய ஆண்டுகளில் எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அடுத்தடுத்து வந்த அமைச்சர் பதவிகள்

முதலமைச்சர் சுதாகர் ராவ் நாயக் அரசில் விவசாயம் மற்றும் எரிசக்தி துறை இணை அமைச்சராக பதவி வகித்தார். 1999ஆம் ஆண்டு தேசியவாத காங்கிரஸ் உதயமாகும் போது சரத் பவார் பக்கம் நின்றார். சரத் பவார் மகாராஷ்டிரா முதலமைச்சராக இருந்த போது மண் வளம், எரிசக்தி மற்றும் திட்டமிடல் துறை இணை அமைச்சராக இருந்தார். 1999ல் காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்த போது முதல்முறை அமைச்சராக உயர்ந்தார்.

வறட்சியும், சிறுநீரும்

அதன்பிறகு பலமுறை அமைச்சர் பதவிகள் தேடி வந்தன. தேசியவாத காங்கிரஸ் கட்சியில் சர்ச்சைக்குரிய நபராக அஜித் பவார் இருந்ததை மறுக்க முடியாது. 2013 காலகட்டத்தில் அமைச்சராக இருந்த போது வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளும், பொதுமக்களும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பொதுக்கூட்டம் ஒன்றில் பேசும் போது, ”அணையில் தண்ணீர் இல்லை என்பதற்காக சிறுநீரா கழிக்க முடியும்?” என்று கேட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சர்ச்சைக்குரிய தலைவர்

அதன்பிறகு பகிரங்கமாக மன்னிப்பு கேட்டது வேறு கதை. 2019ல் கட்சியின் தலைமையிடம் அனுமதி பெறாமல் திடீரென ஆளும் பாஜக உடன் இணைந்து துணை முதலமைச்சர் பதவியை பெற்றார். ஆனால் வெறும் 80 மணி நேரம் மட்டுமே அந்த பதவியில் நீடித்தார். அரசியல் களம் மாறியது. சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அமைத்த மகா விகாஸ் அகாதி கூட்டணி அரசில் அஜித் பவாருக்கு அதே துணை முதலமைச்சர் பதவி அளிக்கப்பட்டது.

கட்சியை இரண்டாக உடைத்தார்

சமீபத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர்களாக சுப்ரியா சுலே, பிரபுல் படேல் ஆகியோர் நியமிக்கப்பட்ட போது அதிருப்திக்கு ஆளானார். ஆனால் வெளியில் காட்டிக் கொள்ளாமல் அமைதியாக அரசியல் செய்து வந்தார்.

இந்நிலையில் தான் இன்று (ஜூலை 2, 2023) தனது ஆதரவு எம்.எல்.ஏக்கள் உடன் சென்று தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து துணை முதலமைச்சர் பதவி வாங்கியிருக்கிறார். ஒருசமயம் தனது சித்தப்பாவிற்காக எம்.பியாக பதவி வகித்த தொகுதியையே விட்டு கொடுத்தவர் அஜித் பவார். அதே அஜித் பவார் தான் கட்சியை இன்று இரண்டாக உடைத்து தீரா பழி சொல்லுக்கு ஆளாகியிருக்கிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.