புதுச்சேரி | 'பெண்கள் மதுபாட்டில் ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்' – விளம்பரங்களுக்கு தடை: சமூக வலைதளங்களிலும் நீக்க உத்தரவு

புதுச்சேரி: பெண்களுக்கு மது இலவசம், ஒரு பாட்டில் வாங்கினால் ஒன்று இலவசம் உள்ளிட்ட அறிவிப்புகளை சுவரொட்டி, பேனர், சமூக வலைதளங்களில் வெளியிட்டு விளம்பரப்படுத்த புதுச்சேரி, காரைக்காலில் கலால்துறை தடை விதித்துள்ளது.

புதுச்சேரியில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மதுபான கடைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ரெஸ்டோ பார்களும் பல இடங்களில் புதிதாக தொடங்க அனுமதி தரப்பட்டுள்ளது. ரெஸ்டோ பார்களில் நள்ளிரவு வரை கடும் சத்தத்தில் நிகழ்வுகள் நடத்துவது தொடங்கி பல காரணங்களால் மக்கள் எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. மது அருந்தியோர் சாலைகளில் கூடி மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவது தொடங்கி சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர் உயிரிழப்பு வரை நடந்துள்ளது.

அதிக எண்ணிக்கையில் கடைகள் திறக்கப்பட்டுள்ளதால் மது அருந்துவோரை கவர பலரும் பல அறிவிப்புகளை வெளியிட தொடங்கினர். குறிப்பாக ஒரு மதுபாட்டில் வாங்கினால் ஒன்று இலவசம், பெண்களுக்கு மது இலவசம், மது வாங்கினால் பரிசுப் பொருட்கள் என நகரில் சுவரொட்டி ஒட்டுதல், பேனர் வைக்கத் தொடங்கினர். அத்துடன் சமூக வலைதளங்களில் இச்சலுகைகளை விளம்பரம் செய்யத் தொடங்கினர். கலால்துறை சட்டப்படி மது அருந்த ஊக்கப்படுத்துவதுபோல் செயல்படக்கூடாது. இதற்கு பெண்கள் மத்தியில் தொடங்கி புதுச்சேரியில் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கத் தொடங்கினர்.

இந்நிலையில் கலால்துறை தாசில்தார் சிலம்பரசன் இன்று வெளியிட்ட உத்தரவில், “புதுச்சேரி கலால்துறையில் மதுபான விற்பனை உரிமம் பெற்ற உரிமையாளர்கள் தங்களது மதுபான கடைகள், உணவகங்கள், விடுதிகள் மற்றும் சமூக வலைதளங்களில் மதுபான விற்பனை தொடர்பான சலுகைகள், ஒரு மதுபாட்டில் வாங்கினால் மற்றொன்று இலவசம், பெண்களுக்கு மது இலவசம், மது வாங்கினால் பரிசு பொருட்கள் இலவசம் என்பது குறித்து விளம்பர பதாகைகள், சுவரொட்டிகள் வைத்துள்ளனர்.

மதுபானம் விற்பனை தொடர்பாக சலுகை தருவது, பரிசு அளிப்பது தொடர்பாக பதாகைகள், சுவரொட்டி, இணையத்தில் வெளியிடுவது கலால் விதிப்படி தடை செய்யப்பட்டுள்ளது. மதுபான விற்பனை உரிமம் பெற்றவர்கள் தங்களது மதுபான கடைகள், உணவங்கள் விடுதிகள், சமூக வலைத்தளங்களில் இந்த அறிவிப்புகளை உடன் நீக்கவேண்டும். விதிமீறல் தொடர்பாக புகார் வரக்கூடாது. விதிமீறல் இருந்தால் அதன் மீது கலால் விதிகள் படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.