கொழும்பு,
இந்தியா-இலங்கை இடையிலான படகு போக்குவரத்தை இரு நாட்டு மக்களும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறார்கள்.
புதுச்சேரி காரைக்காலில் இருந்து இலங்கை யாழ்ப்பாணம் காங்கேசன்துறைக்கு படகு போக்குவரத்து கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவ்வாறு தொடங்கவில்லை.
இந்நிலையில் இரு நாடுகளுக்கு இடையில் படகு போக்குவரத்து தொடங்குவது மேலும் தாமதமாகும் என இலங்கை துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து துறை மந்திரி நிமல் சிறிபால டிசில்வா கொழும்பில் நேற்று தெரிவித்தார்.
படகு சேவைக்காக இந்தியா தேர்ந்தெடுத்த துறைமுகத்தை மாற்றுவதால் இந்த தாமதம் ஏற்பட்டுள்ளது. புதிதாக நாகப்பட்டினம் துறைமுகத்தை தேர்வு செய்துள்ள இந்திய அதிகாரிகள், அங்கு வசதிகளை அதிகரிப்பதற்காக மேலும் சில நாட்கள் தேவை என்று தெரிவித்துள்ளனர் என்றார்.