சிவ சேனா – பாஜக கூட்டணியில் இணைந்தது ஏன்?- அஜித் பவார் விளக்கம்

மும்பை: மகாராஷ்டிராவில் ஆளும் சிவ சேனா – பாஜக கூட்டணியில் இணைந்தது குறித்து அஜித் பவார் பேட்டியளித்துள்ளார். பிரதமர் மோடி தலைமையில் நாடு முன்னேறுவதாகக் கூறிய அவர் அந்த வளர்ச்சியில் இணைந்து கொள்ள விரும்பியே இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறினார்.

முன்னதாக இன்று (ஜூலை 2) ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் அஜித் பவார் துணை முதல்வராகவும், சக்கன் பூஜ்பால், திலீப் வால்ஸே பாட்டில், அதிதி டட்கரே, தனஞ்சய் முண்டே, ஹசன் முஷ்ரிஃப், ராம்ராஜே நிம்பல்கர், சஞ்சய் பான்ஸோடே, அனில் பாய்தாஸ் பட்டீல் ஆகியோர் அமைச்சர்களாகவும் பதவியேற்றுக் கொண்டனர்.

அஜித் பவார் பேட்டியில், “எங்களால் சிவ சேனாவுடன் கூட்டணியில் இருக்க முடியும் என்றால் பாஜகவுடனும் கூட்டணியில் இருக்க இயலும்தானே. இது மாநிலத்தின் நலனுக்காக எடுக்கப்பட்ட முடிவு. பிரதமர் நரேந்திர மோடி தேசத்தின் வளர்ச்சிக்காக உழைக்கிறார் என்பதில் எந்த சந்தேகமும் இருக்க இயலாது. அதனால் நான் இந்தக் கூட்டணியில் இணைந்துள்ளேன். ஏற்கெனவே எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும் நான் ராஜினாமா செய்துவிட்டேன்.

நாடாளுமன்றத் தேர்தலுக்காக எதிர்க்கட்சிகள் ஒன்று திரள்வது பற்றி நிறைய ஆலோசனைகள் நடக்கின்றன. ஆனால் அதனால் விளைவு ஏதும் ஏற்படவில்லை. ஒவ்வொரு மாநிலத்திலும் எதிர்க்கட்சிகளுக்கு ஒவ்வொரு நிலைப்பாடு இருப்பதே அதற்குக் காரணம்.

இந்தச் சூழலில் இதுவரை நான் எந்த எதிர்க்கட்சியிலும் பிரதமர் மோடியைப் போல் தேச நலனுக்காகப் போராடும் தலைவரைப் பார்க்கவில்லை. 1984-க்குப் பின்னர் இதுபோன்று தனித்து நின்று செயல்படும் தலைவரை நான் பார்க்கவில்லை. பிரதமர் மோடி கடந்த 9 ஆண்டுகளாக அவ்வாறாக உழைத்து வருகிறார். வெளிநாட்டிலும் அவர் பிரபலமாக இருக்கிறார். இந்த வளர்ச்சியில் நாங்கள் இணைய விரும்புகிறோம். அதனால் இந்தக் கூட்டணியில் இணைந்து செயல்பட விரும்புகிறோம்” என்றார்.

சஞ்சய் ராவத் கண்டனம்: இந்நிலையில் அஜித் பவாரின் அரசியல் நகர்வு குறித்து சிவ சேனா (உத்தவ் பால் தாக்கரே) பிரிவு எம்.பி. சஞ்சய் ராவத் தனது ட்விட்டர் பக்கத்தில், “மராட்டிய அரசியலை ‘சுத்தப்படுத்தும்’ பணியை சிலர் கையில் எடுத்துள்ளனர், அவர்கள் வழிக்கு வரட்டும். நான் சரத் பவாருடன் இப்போதுதான் பேசினேன். அவர், தான் வலிமையாக இருப்பதாகக் கூறியுள்ளார். தங்களுக்கு மக்கள் ஆதரவு உள்ளது என்றும் உத்தவ் தாக்கரே மூலம் அனைத்தையும் மீண்டும் உருவாக்குவோம் இருக்கும் என்றும் கூறியுள்ளார். இந்த விளையாட்டை மக்கள் நீண்ட காலம் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்” என்று மராட்டிய மொழியில் பதிவிட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.