சென்னை: Kamal (கமல்) கமலும் ஹெச்.வினோத்தும் இணையும் படத்தை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் பெரும் தொகை கொடுத்து வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
சதுரங்க வேட்டை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஹெச்.வினோத். முதல் படத்திலேயே சென்சிட்டிவான சப்ஜெக்ட்டை கையில் எடுத்து அதை மிக நேர்த்தியாக படமாக்கினார். படத்தில் இடம்பெற்ற வசனங்களும், காட்சியமைப்பும் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. முதல் படத்திலேயே தான் எவ்வளவு தேர்ந்த இயக்குநர் என்பதை அவர் நிரூபித்துவிட்டதால் அவரது படங்கள் மீது ஒரு எதிர்பார்ப்பு எழ ஆரம்பித்தது.
தீரன்: அந்தப் படத்துக்குப் பிறகு கார்த்தியை வைத்து தீரன் அதிகாரம் ஒன்று படத்தை இயக்கினார். உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து உருவாகியிருந்த அந்தப் படம் மெகா ஹிட்டானது. அதேசமயம் காவல் துறையினர் என்கவுன்ட்டர் செய்வதையும், காவல் துறையையும் வினோத் ரொம்பவே புகழ்ந்திருக்கிறார் என்ற சர்ச்சையும் எழுந்தது. அதை காலப்போக்கில் அவரும் புரிந்துகொண்டு இனி இவ்வாறு படம் செய்ய மாட்டேன் என்றும் கூறினார்.
அஜித்துடன்கூட்டணி: முதல் இரண்டு படங்கள் மெகா ஹிட்டானதையடுத்து அஜித்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது வினோத்துக்கு. ஆனால் அஜித்துடன் இணைந்த முதல் படம் தனது சொந்த கதையாக இல்லாமல் பிங்க் படத்தை ரீமேக் செய்தார் வினோத். அப்படி ரீமேக் செய்யப்பட்ட நேர்கொண்ட பார்வை படம் கலவையான விமர்சனங்களை பெற அடுத்ததாக வலிமை படத்தை இயக்கினார். அந்தப் படம் கதை ரீதியாக வரவேற்பை பெற்றாலும் ஏதோ ஒன்று மிஸ் ஆனதாக ரசிகர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து அவர் இயக்கிய துணிவு படமும் ஹிட்டானது.
கமல் – ஹெச்.வினோத்: துணிவு படத்தை முடித்த பிறகு வினோத் யாரை இயக்கவிருக்கிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்திருந்தது. அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்தும் விதமாக கமல் ஹாசனுடன் அவர் இணையவிருக்கிறார் என்ற தகவல் பரவியது. அது ஏறத்தாழ உறுதியும் செய்யப்பட்டுவிட்டதாகவும்; படத்தின் கதை கமலுக்கு பிடித்துவிட்டதாகவும் கூறப்பட்டது. அதேசமயம் பிக்பாஸ் சீசன் 7ஐ கமல் தொகுத்து வழங்குவதால் இதில் நடிக்க தாமதமாகலாம் என கூறப்பட்டது. ஆனால் அந்தத் தகவலில் உண்மை இல்லை என திரைத்துறையினர் உறுதிபட கூறினர்.
வியாபாரம் எவ்வளவு தெரியுமா?: இந்நிலையில் கமலும், ஹெச்.வினோத்தும் இணையும் படத்தை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் 125 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் ஷூட்டிங்கே இன்னும் ஆரம்பிக்கப்படாத சூழலில் இந்த தகவல் ஒட்டுமொத்த கோலிவுட்டையும் பயங்கர ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
எப்போது ஷூட்டிங்: இதற்கிடையே இந்தப் படத்தில் விஜய் சேதுபதி முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதும் குறிப்பிடத்தக்கது. படத்தின் மொத்த ஷூட்டிங்கையே 45 நாட்களில் முடிக்க வினோத் முடிவு செய்திருப்பதாகவும்ல்; கமலின் போர்ஷனுக்கான ஷூட்டிங்கிற்கு 15லிருந்து 20 நாட்கள் மட்டுமே போதுமானது என்றும் கூறப்படுகிறது.