சூரத்: கள்ளக்காதல் கண்ணை மறைக்க, காதலனை கரம்பிடிக்க வசதியாக பெற்றெடுத்த 2 வயது மகனை பெண் ஒருவர் கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதோடு போலீசில் சிக்காமல் இருக்க குழந்தையின் உடலை தமிழில் வெளியான ‛பாபநாசம்’ பட ஸ்டைலில் மறைத்து நாடகமாடிய பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் நயானா மாண்டவி. இவர் குஜராத் மாநிலம் சூரத் மாவட்டம் திண்டோலி பகுதியல் வசித்து வருகிறார். கட்டட தொழிலாளியான இவருக்கு திருமணம் முடிந்து 2 வயதில் வீர் மாண்டவி என்ற மகன் இருந்தான். இந்நிலையில் தான் நயானா அருகே உள்ள போலீஸ் நிலையம் ஒரு புகார் அளித்தார்.
புகாரில், ‛‛கட்டட வேலை செய்தபோது என் மகன் வீர் மாண்டவி மாயமாகிவிட்டான். அவனை கண்டுபிடித்து தர வேண்டும” என புகாரில் தெரிவித்து இருந்தார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.
முதற்கட்டமாக போலீசார் நயானா கட்டட பணி செய்யும் இடத்தில் இருக்கும் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது கட்டட பணி நடக்கும் இடத்தில் இருந்து அவரது மகன் வெளியே செல்வது போல் எந்த காட்சியும் பதிவாகவில்லை. இருப்பினும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. மோப்பநாய் சிறிது தூரம் ஓடிய நிலையில் அப்படியே நின்றது. மோப்பநாயாலும் குழந்தையை கண்டுபிடிக்கவில்லை.
இதையடுத்து நயானாவிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் அலட்சியமாகவும், அதேநேரத்தில் சரியான பதில் அளிக்காமல் இருந்து வந்தார். இதனால் போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. நயானாவிடம் தீவிரமாக விசாரித்தனர். அப்போது ஜார்கண்டை சேர்ந்தவருடன் தனக்கு கள்ள உறவு இருப்பதாகவும், அவர் குழந்தையை கடத்தி சென்றிருக்கலாம் எனவும் தெரிவித்தார்.
இதையடுத்து போலீசார் அவரது காதலனுக்கு போன் செய்து குழந்தை பற்றி கேட்டனர். அதற்கு அவர் தான் குழந்தையை கடத்தவில்லை எனவும் சூரத்துக்கு வரவேயில்லை எனவும் தெரிவித்தார். இதனால் சாட்சி கிடைக்காமல் போலீசார் திணறினர். இருப்பினும் வேறு வழியின்றி மீண்டும் நயானாவை பிடித்து விசாரத்தனர். அப்போது தான் ஷாக் தகவல் ஒன்று வெளியானது.
அதாவது 2 வயது மகனை நயானாவே கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் குழந்தையை கொன்று புதைத்துவிட்டதாகவும், போலீசில் சிக்காமல் இருக்க நாடகமாடியதாகவும் தெரிவித்தார். இதையடுத்து குழந்தை புதைக்கப்பட்டதாக கூறப்படும் இடத்தை போலீசார் தோண்டி பார்த்தனர். அப்போது அங்கு குழந்தையின் உடல் இல்லை. மேலும் நயானா பொய் சொன்னது தெரியவந்தது.
இந்த வேளையில் குழந்தையின் உடலை புதைக்கவில்லை. உடலை குளத்தில் வீசிவிட்டதாக தெரிவித்தார். போலீசாரும் அந்த குளத்துக்கு சென்று உடலை தேடினர். அங்கும் உடல் கிடைக்கவில்லை. இதனால் போலீசார் கோபமடைந்தனர். மேலும் அவரிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். இதனால் நயானா வேறு வழியின்றி உண்மையை கூறினார். அப்போது அவர் சொன்ன தகவல் அனைவரையும் ஷாக்காக்கியது.
அதாவது தனது 2 வயது மகனை கொன்று அவர் வேலை செய்யும் கட்டத்தின் கீழ்தளத்தில் கழிவறைக்காக தோண்டப்பட்ட குழியில் வீசி மறைத்து வைத்தது தெரியவந்தது. மேலும் கொலையை மறைக்கும் இந்த திட்டத்தை அவர் சினிமா பார்த்து கற்று கொண்டதாகவும் தெரிவித்தார்.
அதாவது ‛த்ரிஷ்யம்’ (தமிழில் நடிகர் கமல் நடிப்பில் வெளியான பாபநாசம்) படத்தில் உடலை போலீஸ் நிலைய கட்டுமான பணிக்கான தோண்டப்பட்ட குழிக்குள் போட்டு ஹீரோ மூடுவார். அந்த படத்தை பார்த்து தான் மகனை கொன்று உடலை மறைத்ததாக அவர் கூறியதை கேட்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து புதிதாக கட்டப்படும் கட்டடத்துக்கு போலீசார் அவரை அழைத்து சென்றனர். மேலும் அவர் கூறிய இடத்துக்கு சென்று போலீசார் பார்த்தனர். அப்போது அங்கு குழந்தையின் உடல் இருந்தது. இதையடுத்து போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் கொலைக்கான காரணத்தை போலீசார் கேட்டனர். அப்போது நயானாவுக்கு ஜார்கண்டை சேர்ந்த நபருடன் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். மேலும் நயானா அவரை திருமணம் செய்ய விரும்பியுள்ளார். இதுபற்றி கள்ளக்காதலனிடம் தெரிவித்தார். அதற்கு அவர் குழந்தையுடன் வந்தால் ஏற்க மாட்டேன் என தெரிவித்துள்ளார்.
இதனால் நயானா தனது குழந்தையை பாராமாக கருதினார். மேலும் தீர்த்துக்கட்ட முடிவு செய்து கள்ளக்காதலனின் கரம் பிடிக்க அவர் திட்டமிட்டார். மேலும் குழந்தையை கொன்று கழிவறைக்கான குழியில் போட்டு மூடிவிட்டு மகன் மாயமானதாக நாடகமாடியது தெரியவந்தது. இதையடுத்து நயானாவை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.