“வளர்ந்த நாடுகளை எட்டிப்பிடிக்க 8 மணி நேர வேலை சரியாக இருக்காது. இருக்கிற ஒரு வாழ்க்கையில் நாம் அடிக்கிற அடி சம்மட்டி அடியாக இருக்க வேண்டும்” என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாடக்குளம் அருகே தன் நண்பரும், பா.ஜ.க தகவல் தொழில்நுட்ப அணியின் நிர்வாகியுமான விஷ்ணுபிரசாத், அவர் மனைவி பிரியதர்ஷினி ஆகியோர் தொடங்கியிருக்கும் ஐ.டி நிறுவனத்துக்கு பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை வருகை தந்தார்.
பிறகு ஊழியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழை வழங்கிவிட்டுப் பேசிய அண்ணாமலை, “ஒவ்வோர் ஆண்டும் 7 சதவித வளர்ச்சி அடையும் நாடு இந்தியா. 142 கோடி மக்கள்தொகை கொண்ட இந்தியா, உலகின் மிகப்பெரிய மூன்றாவது பொருளாதார நாடு.
நான் சிவில் சர்வீஸ் தேர்வை எழுதுவதை வாழ்க்கையில் லட்சியமாகக் கொண்டிருந்தேன். என் வாழ்க்கையின் இலக்கு என்பது, செய்ய முடியாததை எடுத்து செய்து காட்ட வேண்டும் என்பதுதான். படிக்கும்போது ஒரு ரோபோட்டைப்போல இயங்கிக் கொண்டிருந்தேன். இன்றைய இளைஞர்கள் புதிய சிந்தனையை கொண்டவர்கள். எல்லாமே முடியும் என்கிற இந்தியா இது. இந்தியாவால் முடியாது என்பதே கிடையாது.
8 மணி நேர வேலை என்பதைப் புறந்தள்ளுங்கள். ஒரு மனிதன் 16 மணி நேரம் வேலை செய்ய வேண்டும். ஆனால், ஓர் இலக்கை நிர்ணயித்து வேலை செய்யுங்கள். நமக்கு உள்ளது ஒரு வாழ்க்கைதான். அந்த வாழ்க்கையில் அடிக்கிற அடி சம்மட்டி அடியாக இருக்க வேண்டும், நாம் இறந்த பின்பும் நம்மைப்பற்றி மக்கள் பேச வேண்டும்.
எட்டு மணி நேர வேலையை நான் நம்பமாட்டேன். நமக்கு மேலே வளர்ந்த பல நாடுகள் உள்ளன. அந்த நாடுகளை 25 ஆண்டுகளில் நாம் எட்டிப் பிடிக்க வேண்டும். அதற்கு எட்டு மணி நேர வேலை சரியாக இருக்காது” என்று பேசினார்.
சமீபத்தில் தனியார் நிறுவனங்களில் வேலை நேரத்தை 12 மணி நேரமாக மாற்ற தமிழக அரசு மசோதா கொண்டு வந்தபோது கடுமையான எதிர்ப்பை சந்தித்ததால், அந்த முடிவைத் திரும்பப் பெற்றுக்கொண்டது. இந்த நிலையில், 16 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்திப் பேசியிருப்பது விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது.
வந்தே பாரத் ரயிலின் மாதிரியை அண்ணாமலைக்கு நினைவுப்பரிசாக ஐ.டி நிறுவனத்தினர் வழங்கினர். அண்ணாமலை கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த பா.ஜ.க நிர்வாகிகளை ஐ.டி நிறுவனத்துக்குள் அனுமதிக்கவில்லை. நிகழ்ச்சி நிறைவடைந்த பிறகு, நிர்வாகிகள் அணிவித்த சால்வைகளை அண்ணாமலை ஏற்றுக்கொண்டார்.