அமைச்சர் மா.சு.,வே அப்படி கேட்டார்… அநீயாயமா என் குழந்தை கை போச்சு… தாய் அஜிஷா பரபரப்பு!

சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் குழந்தை ஒன்று சிகிச்சைக்காக வந்திருந்த நிலையில், அதன் கை அழுகி அகற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தற்போது அறுவை சிகிச்சை மூலம் கை அகற்றப்பட்டு விட்டது. ஆனால் மருத்துவர்கள் அளித்த தவறான சிகிச்சை தான் குழந்தையின் கை அழுகியதற்கு காரணம் என்று பெற்றோர் குற்றம்சாட்டுகின்றனர்.

தாய் அஜிஷா பேட்டி

இந்நிலையில் பாதிக்கப்பட்ட குழந்தையின் தாய் அஜிஷா செய்தியாளர்களிடம் பேசுகையில், மருத்துவரையும், செவிலியரையும் காப்பாற்ற பொய் கூறுகிறார்கள். அப்படியே பூசி மொழுக பார்க்கிறார்கள். ஐசியூவில் நடந்தது இதுதான். அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் சிலர் வந்திருந்தனர்.

செந்நிறமாக மாறிய கை

அவர்கள் என்ன பிரச்சினை என்று கேட்டனர். நான் மீடியாவில் பேசி வருகிறேன் என்பதால் என் கணவரிடம் தான் விசாரித்தனர். என் பிள்ளையின் கை கடந்த சனிக்கிழமை தான் முழுவதும் செந்நிறமாக மாறியது. அப்போது செவிலியரிடம் தான் முதலில் காண்பித்தேன். அதுக்கு முன்னாடியே அலர்ட் பண்ணியிருந்தேன்.

ராமநாதபுரம் டூ சென்னை

5 விரல்கள் வரை சிவப்பாக இருப்பதாக சொன்னேன். அவர்கள் வரவே இல்லை. இது நடந்தது வியாழன் அன்று. அவர் எழுதி கொடுத்த ஆயின்மெண்ட் தான் போட்டேன். நல்லாயிருக்கிற பிள்ளைக்கு எதுக்காக ஆயின்மெண்ட் போட வேண்டும் என்பது தான் எனது கேள்வி. குழந்தை ராமநாதபுரத்தில் பிறந்த போது 15 நாட்கள் வெண்டிலேட்டரில் இருந்தான்.

தலையில் நீர்

அதன்பிறகு குழந்தை அழவே இல்லை என்பதால் 3 மாதங்கள் கழித்து ஸ்கேன் எடுத்து பார்த்தனர். அப்போது தலையில் நீர் இருப்பதாக மட்டும் தான் கூறினர். அதன்பிறகு மதுரை சென்றோம். அங்கு திருப்தி அளிக்காததால் சென்னை வந்தோம். இங்கு பல குளறுபடிகள் செய்து கையை அகற்றும் அளவிற்கு கொண்டு வந்துவிட்டனர்.

கடைசி நேர கையெழுத்து

குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கு முன்பாக ஒரு பேப்பரில் கையெழுத்து வாங்குவது வழக்கமான நடைமுறை தான். எப்படியாவது குழந்தை காப்பாற்றப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் யோசிக்காமல் எந்த ஒரு தாயும் கையெழுத்து போட்டு விடுவர். ஆனால் அந்த பேப்பரை வைத்து கொண்டு எங்களை அமுக்க பார்க்கின்றனர்.

அமைச்சர் கேட்ட கேள்வி

பத்தோடு, பதினொன்றாக இதை மூடி விட வேண்டும் என முயற்சிக்கின்றனர். மூன்றாவது நபர் சொல்லி கொடுத்து நான் பேசுவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் என்னிடம் கேட்கிறார். அப்படி என் குழந்தையை வைத்து அக்னி பரீட்சையில் இறங்க வேண்டிய அவசியம் என்ன? எனக் கேள்வி எழுப்பினார். என் மகனுக்கு நீதி வேண்டும் என்று தாய் அஜிஷா கேட்டுக் கொண்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.