டெல் அவிவ்: பாலஸ்தீனத்தின் மேற்கு கரை பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 5 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். இதனால் அங்கு பதற்றம் நிலவுகிறது.
இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், ”மேற்கு கரை பகுதியில் உள்ள ஜெனின் அகதிகள் முகாமில் இஸ்ரேல் ராணுவத்தினர் வான்வழி தாக்குதல் நடத்தினர். நள்ளிரவில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் பாலஸ்தீனர்கள் 5 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்” என்று செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இன்று காலை, மேற்கு கரையில் இஸ்ரேல் ராணுவம் சுமார் பத்துமுறை தாக்குதல் நடத்தியதாக பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலில் பாலஸ்தீனர்களின் ஏராளான வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
தாக்குதல் குறித்து பாலஸ்தீன வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், “இஸ்ரேலின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை நாங்கள் கடுமையாகக் கண்டிக்கிறோம். அவர்கள் ஆயுதம் ஏந்தாத அப்பாவி மக்களை தாக்குகிறார்கள். அம்புலன்ஸ்களை தாக்குகிறார்கள்“ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தாக்குதல் தொடர்பாக இஸ்ரேல் தரப்பில் இதுவரை பதில் அளிக்கப்படவில்லை.
பாலஸ்தீனத்தின் மேற்கு கரையில் உள்ள ஜெனின் அகதிகள் முகாமில் தீவிரவாதிகள் இருப்பதாகக் கூறி, இஸ்ரேல் ராணுவம் நடத்திய இந்த தாக்குதலுக்கு சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஜெருசலேமில் அல் அக்ஸா மசூதியில் பாலஸ்தீனர்களுக்கும், இஸ்ரேல் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இஸ்ரேல் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பலர் காயமடைய, சிறுவன் ஒருவர் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே மீண்டும் மோதல் உருவானது. அமெரிக்காவும் ஐக்கிய நாடுகள் சபையும் தலையிட்டு இரு நாடுகளும் அமைதி காக்க வலியுறுத்தின. இந்த நிலையில், மீண்டும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.