டேராடூன்: இமயமலையில் அமைந்துள்ள ஜோஷிமத் நகரில் கடந்தாண்டு விரிசல்கள் ஏற்பட்ட நிலையில், இப்போது அங்கே திடீரென மீண்டும் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரகண்ட்டில் இமயமலை அருகே அமைந்துள்ள நகரம் ஜோஷிமத் குறித்து அனைவருக்கும் நினைவு இருக்கும். ஆன்மீக சுற்றுலா செல்பவர்களுக்கு முக்கிய இடமாக இருக்கும் ஜோஷிமத் நகர் கடந்தாண்டு இறுதியில் செய்தியில் இடம்பிடித்தது.
அங்கே சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த நிலையில், நகரம் திடீரென புதையத் தொடங்கியது. சுமார் 6.5 செ.மீ வரை நகரம் புதைந்துள்ளது. அப்போது யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்றாலும் மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.
ஜோஷிமத்: கடல்மட்டத்தில் இருந்து சுமார் 1890 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ஜோஷிமத் நகரில் புதையத் தொடங்கிய நிலையில், முக்கிய சாலைகள் மற்றும் வீடுகளில் விரிசல் ஏற்படத் தொடங்கியன. இதையடுத்து அங்கிருந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். பொதுமக்கள் வேறு இடங்களில் தங்கத் தேவையான மாற்று ஏற்பாடுகளும் செய்யப்பட்டது.
மேலும், அங்கே ஏற்பட்ட பாதிப்பு குறித்தும் அதை எப்படிச் சரி செய்யலாம் என்பது குறித்தும் ஆய்வு செய்யத் தனியாக ஒரு வல்லுநர் குழுவும் அமைக்கப்பட்டது. அந்த வல்லுநர் குழு ஆய்வுப் பணிகளைத் தீவிரமாகச் செய்து வரும் நிலையில், அங்கே உள்ள வயல் ஒன்றில் திடீரென 6 அடிக்குப் பள்ளம் ஏற்பட்டுள்ளது. முதலில் விரிசல் ஏற்பட்டதை போலவே இந்தச் சம்பவம் நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதிய துளை: இது குறித்து அப்பகுதியில் வசிக்கும் ஒருவர் கூறுகையில், “எனக்குச் சொந்தமான வயல் நிலத்தில் திடீரென 6 அடி ஆழத்தில் ஒரு துளை ஏற்பட்டுள்ளது. பருவமழை காரணமாக இது உருவாகியிருக்கலாம் எனக் கருதுகிறேன். கற்களைக் கொண்டு அதை முடியுள்ளேன். வீடுகளில் ஏற்பட்ட விரிசல்களும் கூட மெல்லப் பெரிதாகி வருகிறது. நான் கடந்த ஜனவரி 6 முதல் ஹோட்டலில் தான் வசித்து வருகிறேன்.
அன்றைய தினம் என்ன நடந்தது என்பதை என்னால் மறக்கவே முடியாது. அப்போது நகர் முழுக்க படுவேகமாக விரிசல்கள் ஏற்பட்டது. இதையடுத்து பாதுகாப்பு கருதி மக்களை வெளியேறச் சொன்னார்கள். அப்போது முதல் நாங்கள் ஹோட்டலில் தான் வசித்து வருகிறோம்” என்றார். இப்போது புதிதாக அங்கே துளை ஏற்பட்டுள்ள நிலையில், தொழில்நுட்பக் குழு அங்குச் சென்று அதை நேரில் ஆய்வு செய்துள்ளனர்.
விரிசல்கள்: ஜோஷிமத்தில் 868 கட்டமைப்புகள் விரிசல்களை ஏற்பட்டுள்ளன. அவற்றை ஆய்வு செய்த வல்லுநர் குழு 181 கட்டுமானங்கள் பாதுகாப்பு இல்லாமல் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர். இந்த ஆண்டின் தொடக்கத்தில் பலர் வெளியேற்றப்பட்ட நிலையில், அவர்களில் பெரும்பாலானோர் இன்னும் நிவாரண முகாம்களில் வசித்து வருகின்றனர்.
இன்னும் சில வாரங்களில் அங்கே பருவமழை பெய்ய உள்ளது. கடந்தாண்டும் கூட பருவ மழைக் காலத்தில் தான் ஜோஷிமத் நகரம் மண்ணுக்கு அடியில் புதையத் தொடங்கியது. இதற்கிடையே இந்தாண்டு பருவமழையிலும் அதேபோல பாதிப்பு எதாவது ஏற்படுமோ என்று அங்குள்ள பொதுமக்கள் அஞ்சுகின்றனர். இது தொடர்பாக ஆய்வு செய்து வல்லுநர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தியுள்ளனர்.