பாரீஸ்: ஒட்டுமொத்த பிரான்ஸ் நாடும் இப்போது பற்றி எரிந்து கொண்டிருக்கும் நிலையில், சிறுவனைக் கொடூரமாகக் கொலை செய்த போலீருக்கு ஆதரவாகச் சிலர் கிளம்பியுள்ளது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
ஐரோப்பாவில் இருக்கும் பிரான்ஸ் நாட்டில் காரில் சென்று கொண்டிருந்த 17 வயது சிறுவன் விதிமீறலில் ஈடுபட்டதாகச் சொல்லி அவரை போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர். அவரிடம் இரண்டு போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.
அப்போது அந்த சிறுவனைக் காரை திடீரென எடுத்துக் கொண்டு கிளம்பிய போது, அவரை கொடூரமாகச் சுட்டுக் கொன்றனர். முதலில் அந்த சிறுவன் தங்களை மோதும் வகையில் வாகனத்தை ஓட்டி வந்ததாலேயே சுட்டுக் கொன்றதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.
பிரான்ஸ்: இருப்பினும், இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியான போது தான் உண்மையில் என்ன நடந்தது என்பது தெரிய வந்தது. அதாவது அந்த சிறுவனுக்கு மிக அருகில் சென்ற போலீசார், அவனது நெற்றியில் துப்பாக்கியை வைத்து மிரட்டியுள்ளனர். உன் தலையில் தோட்டாவை பாய்க்க போகிறேன் என்றெல்லாம் மிரட்டிய பின்னரே விசாரித்துள்ளனர். இதனால் அந்த சிறுவன் அச்சத்தில் காரை எடுத்துக் கொண்டு கிளம்ப முயன்ற போது தான், அவனைக் கொடூரமாகச் சுட்டுக் கொன்றுள்ளனர்.
இந்த வீடியோ வந்த பிறகே அங்கே போராட்டம் தீவிரமடைந்தது. போலீசார் சிறுவனைச் சுட்டுக் கொன்றது மட்டுமின்றி பொய்யும் சொல்வதை ஏற்க முடியாது என போலீசார் தெரிவித்தனர். அந் சிறுவன் அல்ஜீரியா நாட்டில் இருந்து வந்தவர். பிரான்ஸ் போலீசார் குறைந்த வருமானம் கொண்ட மக்கள் மற்றும் புலம்பெயர்ந்தோரிடம் இப்படி தான் தொடர்ந்து அத்துமீறி நடந்து கொள்வதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளனர். எனவே, போலீஸ் துறையில் உடனடி சீர்திருத்தங்கள் வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
போலீசுக்கு ஆதரவு: இந்த தீவிர போராட்டம் காரணமாக ஒட்டுமொத்தமாக பிரான்ஸ் முடங்கியுள்ளது. இதனால் எங்குப் பார்த்தாலும் ஒரு வித குழப்பமான சூழலே நிலவி வருகிறது. இதில் 17 வயது சிறுவனை மிரட்டி கொடூரமாகக் கொன்ற போலீசாருக்கு ஆதரவாகவும் சிலர் கிளம்பியுள்ளனர். அவர்கள் போலீசார் செய்தது சரி என்றே தொடர்ந்து கூறி வருகின்றனர். இதற்கிடையே நஹெலை சுட்டுக் கொன்ற போலீசுக்கு ஆதரவாக GoFund me என்ற நன்கொடை திரட்டும் அகவுண்டை செட் செய்துள்ளனர்.
அதில் பலரும் அந்த போலீசாருக்கு ஆதரவாக நிதியளித்து வருகின்றனர். அதன்படி இதுவரை அந்த போலீசுக்கு ஆதரவாக 700,000 யூரோக்களுக்கு மேல் திரட்டப்பட்டுள்ளது. அதாவது இந்திய மதிப்பில் 6.5 கோடி ரூபாய் இதில் நன்கொடையாகத் திரட்டப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டில் இருக்கும் தீவிர வலதுசாரி அதிபர் வேட்பாளரான எரிக் ஜெமோருக்கு ஆதரவாக முழு வீச்சில் பிரசாரம் செய்து வரும் அரசியல்வாதியான ஜீன் மெஸ்ஸிஹா என்பவரை இந்த நிதி திரட்டும் பக்கத்தை ஓபன் செய்துள்ளனர்.
என்ன சொல்கிறார்: இது தொடர்பாக ஜீன் மெஸ்ஸிஹா மேலும் கூறுகையில், “போலீஸ் செய்ததில் எந்தவொரு தவறும் இல்லை. அவர் அவரது வேலையைத் தான் செய்தார். ஆனால், இப்போது அதற்கு அவர் அதிக விலை கொடுக்க வேண்டி இருக்கிறது” என்று தெரிவித்தார்.
முன்னதாக இந்தச் சம்பவம் குறித்து பிரான்ஸ் போலீசார் முதற்கட்ட விசாரணையை நடத்தினர். அதில் துப்பாக்கியைப் பயன்படுத்தும் அளவுக்கு நிலைமை மோசமாகவில்லை என்றே போலீசார் தெரிவித்திருந்தனர். இருப்பினும், இந்த வலதுசாரி தலைவர்கள் அவர் செய்ததில் தவறு இல்லை என்றே தொடர்ந்து கூறி வருகின்றனர்.