சிம்பு உட்பட 15 ஹீரோக்களுக்கு ரெட் கார்டு?! தயாரிப்பாளர் – நடிகர் சங்கக் கூட்டத்தில் நடந்தது என்ன?

தயாரிப்பாளர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்காத 15 ஹீரோக்களுக்கு ரெட் கார்டு போடுவது தொடர்பாக, தயாரிப்பாளர்கள் சங்கத்தினர், நடிகர்கள் சங்கத்தினருடன் நேற்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதுபற்றிய விபரம் வருமாறு…

கடந்த மாதம் நடந்த தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கக் கூட்டத்தில் தயாரிப்பாளர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு படப்பிடிப்பு, மற்றும் டப்பிங் வேலைகளில் தொடர்ந்து பிரச்னை செய்துவரும் ஐந்து நடிகர்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. அதன்படி, ‘அவர்களை வைத்துப் படம் தொடங்குவதற்கு முன்பு, தயாரிப்பாளர்கள் சங்கத்தைத் தொடர்புகொண்ட பிறகே ஒப்பந்தம் செய்ய வேண்டும்’ என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த நடிகர்களின் பெயர்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் முடிவு செய்துள்ளார்கள். இதில் சிம்பு, தனுஷ், எஸ்.ஜே.சூர்யா, அதர்வா, ரெடின் கிங்ஸ்லி, விஜய் சேதுபதி எனப் பலரது பெயர்கள் அடிபட்டன.

யோகிபாபு

இந்தப் பிரச்னை குறித்துத் தயாரிப்பாளர்கள் சங்கம், நடிகர் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது என்று அறிவித்தனர். இதைத் தொடர்ந்து தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் முரளி என்.ராமசாமி மற்றும் நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள், நடிகர்கள் சங்கத்திலிருந்து அதன் தலைவர் நாசர் மற்றும் சங்க நிர்வாகிகள் உட்பட இரு சங்கத்தினரும் பங்கேற்ற கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது. இதுகுறித்து தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவரான முரளி ராமசாமியிடம் கேட்டேன்.

“நேற்று நடந்த கூட்டம் ஒரு பரஸ்பர புரிதலுக்காக நடத்தப்பட்ட ஒன்றுதான். இதில் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும், நடிகர்கள் சங்கத்திற்கு இடையேயான பொதுவிதிகள் குறித்துப் பேசினோம். சில நடிகர்களால் தயாரிப்பாளர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்னைகள் குறித்தும் விவாதித்தோம். நடிகர் சங்கத்தின் தலைவரான நாசர் சார், தயாரிப்பாளர்களின் கஷ்டங்களை உணர்ந்தவர் என்பதால், முழு ஒத்துழைப்பு கொடுத்தார். நாங்கள் சொன்ன பிரச்னைகளை காது கொடுத்துக் கேட்டதுடன், சம்பந்தப்பட்ட நடிகர்களுக்கும் தெரிவித்து அவர்கள் தரப்பு பதில்களையும் அடுத்த கூட்டத்தில் தெரிவிப்பதாகச் சொல்லியிருக்கிறார். அதனால் அடுத்தடுத்த கூட்டங்கள் இன்னும் நடக்கவிருக்கின்றன.

நாசர்

சிறிய நடிகர்கள் முதல் பெரிய நடிகர்கள் வரை அவர்களின் சம்பளம், இதர விஷயங்கள் குறித்து ஒரு தயாரிப்பாளருக்கு இருக்கக்கூடிய நன்மைகள், தீமைகள் குறித்தும் கலந்து பேசியிருக்கோம். நடிகர், நடிகைகளின் சம்பளத்திலிருந்து அவர்களின் உதவியாளர்கள் ஹேர்டிரெஸ்ஸர், காஸ்ட்யூமர், மேக்கப்மேன் ஆகியோரின் ஊதியங்கள், தேதி குளறுபடிகள், நேரம் தவறாமை எனப் பல விஷயங்கள் இந்தப் பொதுவிதியில் அடங்கும். அத்தனையுமே கலந்து விவாதித்துள்ளோம். நடிகர்களுக்கு எங்க பக்கம் இருந்து எத்தகைய ஆதரவு தேவைப்படுகிறது, நடிகர்கள் அவர்கள் பக்கமிருந்து எங்களுக்கு எப்படி உதவ முடியும் என்பது போன்ற விஷயங்களையும் இந்தக் கூட்டத்தில் பேசியிருக்கோம்” என்றார்.

சிம்பு, தனுஷ், எஸ்.ஜே.சூர்யா, யோகி பாபு, அதர்வான்னு 15 நடிகர்களுக்கு மேல ரெட் கார்டு போடப்போறதா பேச்சு வார்த்தை நடந்ததாமே?

முரளி என்.ராமசாமி

“வெளியிலும் அப்படித் தகவல்கள் இருக்கு. தயாரிப்பாளர்களோட பணம் பெரியளவுல முடங்கியிருக்கு. அந்தப் பணத்துக்கு வட்டியும் சேர்த்தால் இன்னும் பெரிய தொகையா வந்து நிற்கும். தயாரிப்பாளருக்கு ஒத்துழைப்பு கொடுக்காத நடிகர்கள் குறித்தும் பேசியிருக்கோம். நேற்று நடந்தது முதல் கூட்டம்தான். சம்பந்தப்பட்ட நடிகர்களின் பதில்களை வைத்து, அடுத்தடுத்த வாரங்களில் நடக்கும் கூட்டங்களுக்குப் பின்னரே, நடிகர்களின் பெயர்களை அறிவிப்பது குறித்து முடிவு எடுப்போம். முடங்கிக் கிடக்கும் பணத்தையும், படங்களையும் பேசித் தீர்த்துக் கொண்டுவரத்தான் விரும்புகிறோம். நடிகர்கள் சங்கத்தினர், பிரச்னைகளைச் சரி பண்ண நேரம் கேட்டிருக்காங்க. அவங்க சரி பண்ணினாலே, தயாரிப்பாளர்களின் பிரச்னைகளும் சரியாகிவிடும்” என்கிறார் முரளி.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.