ட்விட்டர் மற்ற சமூக வலைதளங்களிலிருந்து அது துவக்கப்பட்ட காலம் முதலே வேறுபட்டு இருந்து வந்தது. தனி மனித சுதந்திரம் ட்விட்டரில் பிராதான மந்திரச் சொல்லாக பயணித்தது. நீங்கள் எந்தப் பிரபலங்களையும் பாரட்டலாம், விமர்சிக்கலாம். அந்தப் பாராட்டுகளும் விமர்சனங்களும் அத்துடன் நில்லாமல், அதற்கான பதில்களும் சம்பந்தப்பட்ட பிரபலங்களிடமிருந்து பயனாளர்களுக்கு பல தருணங்களில் கிடைத்திருக்கிறது. அதுமட்டும் இல்லை, அதிகாரங்களையும், சர்வாதிகாரங்களையும் கேள்வி கேட்கும் உரிமையை ட்விட்டர் கொடுத்தது. மெட்டா (ஃபேஸ்புக் ) அதன் பயனர்களிடமிருந்து விலகிச் சென்ற காரணத்தால், அதன் பயனாளர்கள் பலரும் ட்விட்டரை தேர்ந்தெடுந்தார்கள்.
அவ்வாறு விலகி வந்தவர்களுக்கு தனி சுவாசத்தை ட்விட்டர் வழங்கியது. ட்விட்டரும் ஒருவகையில் தொடக்கத்தில் ஆரோக்கியமான முறையில் அந்தப் பயனாளர்களை பயன்படுத்திக் கொண்டது. நீங்கள் உங்களைப் பற்றிய தனிப்பட்ட தகவல்களையோ புகைப்படங்களையோ பகிராமல் உங்கள் சுய ஆளுமைத் திறனால் ட்விட்டரில் பெரிய எண்ணிக்கையில் பின்தொடர்பாளர்களை பெற்றுக்கொள்ள முடியும். அந்த வாய்பை ட்விட்டர் அளித்திருந்தது.
ட்விட்டர் மற்ற சமூக வலைதளங்களுடன் ஒப்பிடுகையில், அதன் பயனர்களுக்கு கூடுதல் பாதுகாப்பை அளித்தது. பயன்பாட்டிலும் கடுமைகளை ட்விட்டர் கொண்டிருக்கவில்லை. இன்று வரை ட்விட்டரை பிற சமூக வலைதளங்களிடமிருந்து வேறுப்படுத்தி காட்டுவது இதுவே. ஆனால், சமீப ஆண்டுகளில் ட்விட்டர் தனது இயல்பை முற்றிலும் இழந்து வருகிறது.
குறிப்பாக, ஸ்பேஸ் எக்ஸ் – டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கியதிலிருந்து ட்விட்டர் தனது பண்பை மெல்ல மெல்ல இழந்து வருகிறது. வேண்டாத பொம்மையை அடம் பிடித்து வாங்கி, அதன் பாகங்களை ஒவ்வொன்றாக பிரித்துப் போடும் குழந்தையைப் போல் எலான் மஸ்க் ட்விட்டர் விவகாரத்தை கையாண்டு வருகிறார்.
பணம் செலுத்தினால் ப்ளு டிக் என்ற அறிவிப்பு விமர்சனத்தை ஏற்படுத்தி ஓய்ந்த பிறகு, புதிய அறிவிப்பை எலான் மஸ்க் வெளியிட்டிருக்கிறார். ட்விட்டரில் ப்ளு டிக் வைத்திருப்பவர்கள் நாள் ஒன்றுக்கு 600 போஸ்ட்களையும், புதிய கணக்கு தொடங்கியவர்கள் நாள் ஒன்றுக்கு 300 போஸ்ட்களையும், ப்ளு டிக் வைத்திருப்பவர்கள் நாள் ஒன்றுக்கு 6,000 போஸ்ட்களை மட்டுமே பார்க்க முடியும் என என எலான் மஸ்க் கடந்த சனிக்கிழமை அறிவித்தார்.
ட்விட்டருக்கு விதிக்கப்பட்ட இந்தக் கட்டுப்பாடுகள் குறித்து அதன் உரிமையாளர் எலான் மஸ்க் கூறுகையில், ‘‘ஒவ்வொரு நிறுவனமும் செயற்கை நுண்ணறிவு மாதிரியை அறிமுகப்படுத்தி ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கிறது. ஸ்டார்ட் அப் நிறுவனம் முதல் மிகப் பெரிய நிறுவனங்கள் வரை மிக அதிகளவிலான தரவுகளை பயன்படுத்துகின்றன. செயற்கை நுண்ணறிவு ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் தேவையை நிறைவேற்ற அதிகளவிலான சர்வர்களை ஆன்லைனில் எங்கள் குழுவினர் பயன்படுத்த வேண்டியுள்ளது. இந்த வரம்புகள் விரைவில் தளர்த்தப்படும்” என்று தெரிவித்தார்.
எனினும், எலான் மஸ்கின் இந்த நடவடிக்கையை நிபுணர்கள் பலர் கடுமையாக விமர்சித்துள்ளனர். அதில் முதன்மையாக கூறப்படுவது, செய்திகளை நாடி வருபவர்களுக்கு இந்த அறிவிப்பு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்பதே.
ட்விட்டரை எப்படி செய்தி நிறுவனங்களும், பொழுதுப்போக்கு, விளம்பரதார நிறுவனங்களும் பயன்படுத்தி கொள்கிறதோ, அதே வகையில் ட்விட்டரும் அந்த நிறுவனங்களை கன்டன்ட்களுக்காக பயன்படுத்திக் கொள்கிறது என்பதை மறுக்க முடியாது. ஒருவகையில் இரு தரப்பும் பயன் அடையும் தளமாகதான் ட்விட்டர் செயல்படுகிறது. ட்விட்டரின் இயல்பு அதுவாகவே இத்தனை நாட்களாக இருந்து வருகிறது.
இதன் உச்சமாக, எங்களால் நீங்கள் மட்டும் பயன் அடைகிறீர்கள் என்று பயனர்களை அழுத்திக் கொண்டிருக்கும் எலான் மஸ்கின் அணுகுமுறை நிச்சயம் விமர்சிக்கப்பட வேண்டியது. தொடர்ந்து பயனர்கள் மீதும், நிறுவனங்கள் மீதும் எலான் நெருக்கடியை அதிகரித்து ட்விட்டருக்கான சிறப்பம்சத்தை குறைப்பதுடன், அதன் பயனர்கள் வெளியேறும் சூழலையும் வருகிறார்.
”மஸ்க் கொண்டு வந்த “குழப்பத்தால்” ஏற்கெனவே அதிர்ச்சியடைந்திருந்த பயனர்கள் மற்றும் விளம்பரதாரர்களுக்கு புதிய வரம்புகள் மிகுந்த மோசமான அனுபவத்தை அளித்துள்ளன” எனபிரபல ஃபாரெஸ்டர் ஆராய்ச்சி இயக்குநர் மைக் ப்ரூல்க்ஸ் தனது கவலையை பகிர்ந்திருக்கிறார்.
ட்விட்டர் சுதந்திரம், தனித்து செயல்படுதல் ஆகிய இரு கரணங்களுக்காக கொண்டாடப்பட்டு வந்திருக்கிறது. ஆனால், அதற்கு நேர்மாறாக செயல்படும் எலான் மஸ்கின் சமீபத்திய நடவடிக்கைகள், “ட்விட்டரை விட்டுவிடுங்கள் மஸ்க்” என்ற கோரிக்கை வலுபெற காரணமாகி வருகிறது.