மெக்சிகோவில் வினோதம்; பெண் முதலையை திருமணம் செய்த மேயர்

மெக்சிகோ சிட்டி,

தெற்கு மெக்சிகோவில் உள்ள நகரம் சான் பெட்ரோ ஹுவாமெலுலா. இந்த நகரத்தின் மேயராக இருப்பவர் விக்டர் ஹியூகோ சொசா. இவர், ஆலிசியா ஆட்ரியானா என்ற பெயர் கொண்ட பெண் முதலை ஒன்றை பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்டு உள்ளார்.

இது 230 ஆண்டு கால பழமையான நடைமுறையாகும். இதனால், மழை பொழிவு இருக்கும், பயிர்கள் செழிப்புடன் வளரும், அமைதி மற்றும் நல்லிணக்கம் ஏற்படும் என்ற நோக்கத்திற்காக இந்த திருமண நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

சொந்தல் மற்றும் ஹுவாகே ஆகிய இரு உள்ளூர் குழுக்களுக்கு இடையேயான அமைதிக்கான ஓர் அடையாளம் இந்த திருமணம். இதனால், நல்ல அதிர்ஷ்டம் கொண்டு வரப்படும் என நம்பப்படுகிறது.

இந்த திருமணம் நடைபெறுவதற்கு முன்பு, முதலைக்கு இளவரசி போன்று ஆடைகள் அணிவிக்கப்பட்டன. பாதுகாப்புக்காக அதன் வாயை கட்டி விட்டனர். முதலையை மக்களின் வீடுகளுக்கு கொண்டு சென்று, நடனம் ஆடி மகிழ்ந்து உள்ளனர்.

திருமணம் செய்த பின்னர், மணமகளான முதலையை கையில் வைத்து கொண்டு மேயர் சொசா, உற்சாக நடனம் ஆடினார். கலாசார இணைவை கொண்டாடும் இந்த நிகழ்ச்சியின் நிறைவாக அதன் மூக்கு பகுதியில் மேயர் சொசா முத்தமிட்டார். அதன் பின்னர் நிகழ்ச்சி முடிவுக்கு வந்தது.

நம்மூரில் மழை வேண்டி தவளை மற்றும் கழுதைகளுக்கு திருமணம் செய்து வைக்கும் நிகழ்வை போன்று அந்த நாட்டில் இந்த வினோத சடங்கு பல ஆண்டுகளாக பாரம்பரிய முறைப்படி கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.