நாடு முழுவதும் அமலாகுகிறதா பொதுசிவில் சட்டம்? – நாடாளுமன்ற நிலைக்குழு திடீர் ஆலோசனை…!

டெல்லி,

இந்தியாவில் மதத்தின் அடிப்படையில் சிவில் சட்டங்கள் உள்ளன. திருமணம், விவாகரத்து, தத்தெடுப்பு, சொத்துரிமை உள்ளிட்ட பல்வேறு தனி நபர் உரிமைகள் தொடர்பாக அந்தந்த நபர்களின் மதத்திற்கு ஏற்ப சிவில் சட்டங்கள் உள்ளன. தனி நபர் தான் பின்பற்றும் மதத்திற்கு ஏற்றார்போல் சிவில் சட்டங்கள் உள்ளன.

இதனிடையே, நாட்டில் உள்ள அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டம் கொண்டுவர வேண்டும் என பல்வேறு தரப்பும் கோரிக்கை விடுத்து வந்தன. அதேபோல், பொது சிவில் சட்டத்திற்கு பலர் எதிர்ப்பும் தெரிவித்து வந்தனர்.

மத்தியில் ஆளும் பாஜக 2019 நாடாளுமன்ற தேர்தலின்போது தேர்தல் அறிக்கையில் நாட்டில் பொதுசிவில் சட்டம் கொண்டுவரப்படும் என வாக்குறுதி அளித்திருந்தது. இந்த சூழ்நிலையில் சமீபத்தில் பாட்னாவில் நடந்த கூட்டத்தில் பிரதமர் மோடி நாட்டில் பொதுசிவில் சட்டம் கொண்டுவருவது குறித்து பேசினார். வரும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் பொதுச்சிவில் சட்டம் மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், பொதுசிவில் சட்டம் தொடர்பாக நாடாளுமன்ற நிலைக்குழுவின் சட்டம் மற்றும் நீதித்துறை கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. நாடாளுமன்றத்தில் நடைபெற்றுவரும் இந்த ஆலோசனை கூட்டத்தில் நாட்டில் பொதுசிவில் சட்டம் கொண்டுவருவது தொடர்பாக மற்றும் பொதுசிவில் சட்ட மசோதா குறித்து நிலைக்குழு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.

பொதுசிவில் சட்டம் தொடர்பாக சமீபத்தில் நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில் நாடாளுமன்ற நிலைக்குழுவின் சட்டம் மற்றும் நீதித்துறை கூட்டம் இன்று கூட்டியுள்ள நிகழ்வு மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.