இம்பால்: மணிப்பூரில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து நீடித்து வரும் வன்முறையானது விரைவில் முடிவுக்கு வரும் என்றும், வரும் புதன்கிழமை முதல் 1-8ம் வகுப்பு வரை உள்ள பள்ளிகள் செயல்படும் எனவும் மாநில அரசு அறிவித்துள்ளது.
மணிப்பூரில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை கைப்பற்ற பாஜக ஒரு வியூகத்தை வகுத்தது. அதன்படி, மைத்தேயி/மெய்டெய் எனப்படும் பழங்குடி அல்லாத சமூகத்தினருக்கு பழங்குடி அந்தஸ்து வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்தது. இவர்கள் மாநிலத்தின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 53 சதவிகிதமாவார்கள். இந்த வாக்குறுதி பலனளித்தது. பாஜக ஆட்சியை கைப்பற்றியது.
அதன் பின்னர் மைத்தேயி/மெய்டெய் மக்கள் பழங்குடி அந்தஸ்து கேட்டு போராட, பழங்குடியினரான குக்கி, நாகா மக்கள் இதற்கு எதிரான போராட்டத்தை தொடங்கினர். கடந்த மே மாதம் 3ம் தேதி தொடங்கிய இந்த போராட்டங்கள் கலவரமாக மாறி தற்போது வரை 100க்கும் அதிமானோரரை பலி கொண்டுள்ளது. ஆயிரக்கணக்கான வீடுகள், நிறுவனங்கள், வாகனங்கள், வழிபாட்டுத்தலங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.
இந்த வன்முறையில் அரசின் அதிகாரப்பூர்வ கணக்குப்படி 135 பேர் உயிரிழந்துள்ளனர். 5,036 தீவைப்பு வழக்குகள் பதிவாகியுள்ளன, வன்முறைகள் தொடர்பாக 5,889 வழக்குகள் பதிவு செய்யப் பட்டு 144 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாநிலத்தில் சுமார் 36,000 பாதுகாப்புப் படை வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர், 40 இந்திய காவல் சேவை (ஐபிஎஸ்) அதிகாரிகள் மற்றும் 20 மருத்துவக் குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். எனினும், இப்போது வரை மணிப்பூரில் அமைதி திரும்பவில்லை. 300-க்கும் மேற்பட்ட முகாம்களில் 60 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் தங்கியுள்ளனர்.
வன்முறை அடங்காத நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இந்த விஷயத்தில் தலையிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகளும், சொந்த கட்சி எம்எல்ஏக்களும் குரலெழுப்பினர். ஆனால் தற்போது வரை பிரதமர் மோடி மணிப்பூர் எனும் வார்த்தையை எங்கும் உச்சரிக்கவில்லை. அதேபோல, மணிப்பூருக்கும் வந்து பார்க்கவில்லை. எனவே முதலமைச்ரச் பைரேன் சிங் ராஜினாமா செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை வலுக்க தொடங்கியது. அதேபோல பைரேன் சிங்கும் ராஜினாமா செய்வதாக கூறி ஆளுநரை சந்திக்க சென்றார்.
ஆனால் தொண்டர்கள் சிலர் இவருக்கு ஆதரவாக போராட்டம் நடத்தியதால் தனது ராஜினாமா திட்டத்தை கைவிடுவதாக அறிவித்தார். இது எதிர்க்கட்சிகள் மற்றும் போராட்ட குழுக்களிடையே மேலும் அதிருப்தியை அதிகரித்துள்ளது. இந்நிலையில், மாநிலத்தில் விரைவில் இயல்புநிலை திரும்பும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் என் பிரேன் சிங் தலைமையில் ராணுவம், துணை ராணுவப் படைகள் மற்றும் மாநில காவல்துறையின் பிரதிநிதிகளின் கூட்டம் ஒன்று இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில், மாநிலத்தின் பிரதான தொழிலாக இருக்கும் விவசாயம் மீண்டும் சீரான முறையில் நடைபெறுவதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும், இதற்காக விவசாயிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும், விரைவில் மாநிலம் முழுவதும் இயல்புநிலை திரும்ப வேண்டும் என்றும், வன்முறை குழுக்கள் உருவாக்கியுள்ள பதுங்கு குழிகள் அழிக்கப்பட வேண்டும் எனவும் அதேபோல 1-8ம் வகுப்புவரை பள்ளிகள் வரும் புதன்கிழமை முதல் இயங்கும் எனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.