புதுடெல்லி: ரயில் திட்டத்துக்கு நிதி இல்லை என்று கூறும் டெல்லி ஆம் ஆத்மி அரசு கடந்த 3 ஆண்டுகளில் விளம்பரத்துக்காக செலவழித்த தொகை குறித்த விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லியில் காற்று மாசுவைக் கட்டுப்படுத்தவும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் ஆர்ஆர்டிஎஸ் என்ற பெயரிலான ரயில் திட்டம் வரையறுக்கப்பட்டு இருக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் தலைநகர் டெல்லி, உத்தரபிரதேசம், ராஜஸ்தான், ஹரியாணாவை இணைக்கும் வகையில் 8 வழித்தடங்களில் ரயில் பாதைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
இதில் டெல்லி-காஜியாபாத்- மீரட் இடையிலான ரயில் பாதை81.15 கி.மீ. தொலைவு கொண்டதாகும். இந்த ரயில் பாதையின் திட்டச் செலவு ரூ.31,632 கோடியாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.
இதில் முதல்கட்டமாக மத்திய அரசு சார்பில் ரூ.5,687 கோடியும் உத்தர பிரதேச அரசு சார்பில் ரூ.5,828 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. டெல்லி அரசு சார்பில் ரூ.1,138 கோடி நிதிஒதுக்கப்பட வேண்டும்.
ஆனால் போதிய நிதியில்லை, இந்த தொகையை மத்திய அரசே செலுத்த வேண்டும் என்று முதல்வர் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம்ஆத்மி அரசு வாதிட்டு வருகிறது.
இந்த சூழலில் டெல்லியில் காற்று மாசுவைக் கட்டுப்படுத்த ஆர்ஆர்டிஎஸ் ரயில் திட்டத்தை விரைந்து செயல்படுத்தக் கோரி சமூக ஆர்வலர் எம்.சி. மேத்தா உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனுவை தாக்கல் செய்திருக்கிறார். இந்த மனு நீதிபதிகள் எஸ்.கே.கவுல், சுதான்ஷு துலியா அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது டெல்லி ஆம் ஆத்மி அரசு சார்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தில், “கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பரிலேயே எங்கள் நிலையை தெளிவுபடுத்தி விட்டோம். கரோனா பெருந்தொற்றால் அரசின் நிதி நிலைமை மோசமடைந்திருக்கிறது.
ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகை வழங்குவதை கடந்த ஆண்டு மத்திய அரசு நிறுத்திவிட்டது. எனவே ஆர்ஆர்டிஎஸ் ரயில் திட்டத்துக்கு எங்களிடம் போதிய நிதியில்லை. எங்களது நிலையை ரயில் திட்டத்தை செயல்படுத்தும் என்சிஆர்டிசி அமைப்பிடம் தெரிவித்துவிட்டோம்’’ என்று கூறப்பட்டது.
இதைத் தொடர்ந்து நீதிபதிகள் கூறும்போது, “ஆர்ஆர்டிஎஸ் ரயில் திட்டத்துக்கு நிதியில்லை என்று டெல்லி ஆம் ஆத்மி அரசு கூறுகிறது. எனவே கடந்த 3 ஆண்டுகளில் ஆம் ஆத்மி அரசு விளம்பரத்துக்காக செலவழித்த தொகை குறித்த விவரங்களை 2 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும்’’ என்று கண்டிப்புடன் உத்தரவிட்டனர்.