`ஆளுநர் பதவியே தேவையில்லாத ஒன்று' – திருச்சியில் கொதித்த முத்தரசன்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மாநில நிர்வாகக் குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய முத்தரசன், “2024 நாடாளுமன்றத் தேர்தலை அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு முக்கியமான தேர்தலாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது. இன்றைக்கு காய்கறி மற்றும் உணவுப் பொருட்களின் விலை பன்மடங்கு அதிகரித்திருக்கிறது. வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவிற்கு தக்காளி 120 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது. உணவுப் பொருள்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த எந்தவிதமான நடவடிக்கையையும் மோடி அரசாங்கம் எடுக்கவில்லை.

முத்தரசன்

கடந்த மே 3-ம் தேதி முதல், மணிப்பூர் மாநிலமே தீப்பற்றி எரிந்துகொண்டிருக்கிறது. இதுகுறித்து பிரதமர் இதுவரை வாய்திறந்து எதுவும் பேசவில்லை. பிரச்னையை கட்டுப்படுத்தவும், அமைதி நிலவவும் பிரதமர் எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. 150-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயமுற்று மருத்துவமனையில் உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கிறார்கள். 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அம்மாநில மக்கள் அகதிகளாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள். இதுகுறித்தெல்லாம் கவலைப்படாத, வாய் திறந்து பேசாத மோடி, குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து ஓங்கி உரத்த குரல் எழுப்புகிறார். இதன்மூலம் நாட்டில் நடக்கும் பிரச்னைகளை மறைத்து திசை திருப்புவதோடு, மக்கள் மத்தியில் மோதலை உருவாக்க மோடி முயற்சிக்கிறார்” என்றார்.

தொடர்ந்து பேசியவர், “பா.ஜ.க., ஆட்சி நடத்தாத மாநிலங்களில் அங்கு ஆளுநரைக் கொண்டு போட்டி அரசாங்கத்தை நடத்தி வருகிறார்கள். குறிப்பாக தமிழ்நாட்டில் ஒரு போட்டி அரசாங்கத்தை நடத்தி, கலவரத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள். ஆளுநர் பதவி தேவையில்லை, அதை ஒட்டுமொத்தமாக நீக்கிவிட வேண்டும் என்பதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஜனநாயகத்திற்கும் அரசியலமைப்புச் சட்டத்திற்கும் விரோதமாக ஒன்றிய அரசு செயல்பட்டு வருகிறது. அதனால் தான் இந்த மோடி அரசாங்கம் அகற்றப்பட வேண்டும் என ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ளவர்கள் ஒன்று கூடியுள்ளனர்.

முத்தரசன்

கர்நாடகாவில் நடைபெற்று வரும் காங்கிரஸ் அரசாங்கம், மேக்கேதாட்டூவில்அணையைக் கட்டியே தீருவோம் எனக் கூறி வருகின்றனர். கர்நாடக அரசிடம் இப்படியொரு திட்டம் இருக்குமேயானால் அது கைவிடப்பட வேண்டும். ஏற்கனவே காவிரி நதி நீர் பிரச்னை சம்பந்தமாக நடுவர் மன்றம் அமைக்கப்பட்டு, உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு முறையாக வழங்க வேண்டும். அதைவிடுத்து மேக்கேதாட்டூ அணை கட்டுவோம் என குழப்பத்தை கர்நாடக அரசு ஏற்படுத்தக் கூடாது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் சரத்பவார் கட்சியில் இருந்து 40 எம்.எல்.ஏக்கள் விலகி பா.ஜ.க கூட்டணியில் இணைந்துள்ளனர். இதில் அமலாக்கத்துறை மிக வெற்றிகரமாக செயல்பட்டிருக்கிறது. கட்சிகளை உடைப்பதற்கு அமலாக்கத்துறை கைப்பாவையாக மாறிவிட்டது. `செந்தில் பாலாஜி மட்டுமல்ல, இன்னும் பல அமைச்சர்கள் மீது அமலாக்கத்துறை பாயும்’ என அண்ணாமலை சொல்லியிருக்கிறார். அமலாக்கத்துறைக்கு பா.ஜ.க-வின் கைத்தடியாக மாறிவிட்டது என்பதற்கு இதெல்லாம் உதாரணம்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.