மும்பை: அந்நியச் செலாவணி சட்ட மீறல் வழக்கில் Reliance ADA குழுமத் தலைவரான தொழிலதிபர் அனில் அம்பானியிடம் அமலாக்கத் துறையினர் நேற்று விசாரணை மேற்கொண்ட நிலையில், அவரது மனைவி டீனா அம்பானி இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு ஆஜரானார்.
நேற்றைய விசாரணையின்போது அமலாக்கத்துறை அனில் அம்பானியின் வாக்குமூலங்களை பதிவு செய்தது. இந்த வாரத்தின் பின் பகுதியில் அவர் மீண்டும் ஆஜராக வேண்டியிருக்கும் என்று தெரிகிறது. கணக்கில் காட்டப்படாத வெளிநாட்டு சொத்துகள் மற்றும் சில வெளிநாட்டுப் பணப் பரிவர்த்தனைகள் தொடர்பாக இந்த விசாரணை நடைபெறுவதாகத் தெரிகிறது. ஜெர்ஸி, பிரிட்டிஷ் வெர்ஜின் ஐலாண்ட்ஸ் மற்றும் சைப்ரஸ் நாடுகளில் உள்ள சில நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் தொடர்பாக அனில் அபானியிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அமலாக்கத் துறை விசாரணைக்கு அனில் அம்பானி உள்ளாவது இது முதன்முறை அல்ல. கடந்த 2020 ஆம் ஆண்டு யெஸ் வங்கியின் ரானா கபூர் உள்ளிட்ட சிலர் மீதான சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் அனில் அம்பானி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார் .
அதேபோல் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், அனில் அம்பானி மீது கறுப்புப் பண பதுக்கல் புகார் எழுந்தது. இரண்டு ஸ்விஸ் வங்கிகளில் அவர் ரூ.814 கோடி வரை பதுக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதன் மூலம் அவர் ரூ.420 கோடி வரி ஏய்ப்பு செய்ததாக அனில் அம்பானிக்கு வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பியது. இந்நிலையில், அந்நியச் செலாவணி சட்ட மீறல் வழக்கில் அனில் அம்பானி மற்றும் அவரது மனைவி டீனா அம்பானி இடம் அமலாக்கத் துறை அடுத்தடுத்த நாட்களில் விசாரணை நடத்தி நடத்தி இருக்கிறது.