டோக்கியோ: குழந்தை பிறப்பில் இப்போது பலரும் சிக்கல்களை எதிர்கொண்டு வரும் நிலையில், இதற்குத் தீர்வாக ஜப்பான் குழந்தைகளை ஆய்வகத்தில் உருவாக்கும் முறையில் நெருங்கியுள்ளது.
ஜப்பான் தொழில்நுட்ப ரீதியாக வேற லெவலுக்கு சென்று இருப்பது அனைவருக்கும் தெரியும். பல விஷயங்களில் ஜப்பானைப் பார்த்தால் நமக்கு வியப்பாகவே இருக்கும். இதற்கிடையே இப்போது அவர்கள் முக்கிய தொழில்நுட்பத்தில் வேற லெவலுக்கு சென்றுள்ளனர்.
குழந்தைகள் ஏதோ பொருட்களைப் போல லேப்களில் உற்பத்தி செய்யப்படுவதை நாம் சில படங்களில் பார்த்திருப்போம். இதுவரை கற்பனையாக மட்டுமே இது இருந்த நிலையில், மிக விரைவில் இது நிஜமாக மாற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
குழந்தையின்மை: மலட்டுத்தன்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் குழந்தை பிறப்பில் பலருக்கும் பல வித சிக்கல்கள் ஏற்பட்டு இருக்கிறது. ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது, உணவுப் பழக்கம், துரித உணவுகள் எனப் பல காரணங்களால் குழந்தையின்மை பிரச்சினை அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக உலகெங்கும் பல்வேறு ஆய்வுகள் நடந்து வருகிறது. இதற்கிடையே ஜப்பான் ஆய்வாளர்கள் குழந்தையின்மை பிரச்சினைக்கு வேற லெவல் தீர்வை முன்வைத்துள்ளனர்.
அதாவது வரும் 2028 ஆம் ஆண்டிலேயே ஆய்வகத்தில் குழந்தைகளை உருவாக்கும் முயற்சியில் ஜப்பான் ஆய்வாளர்கள் இறங்கியுள்ளனர். ஆய்வகத்தில் மனித செல்களில் இருந்து முட்டை மற்றும் விந்தணுக்களை உற்பத்தி செய்வது குறித்து கியூஷு பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஆய்வு செய்தனர்.
எலிகள்: ஆண் எலிகளின் தோல் செல்களை ப்ளூரிபோடென்ட் ஸ்டெம் செல்களாக மாற்றும் முறையை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதை வைத்தே பல்வேறு வகையான செல்கள் அல்லது திசுக்களை உருவாக்க முடியுமாம். இந்த ஸ்டெம் செல்களை குறிப்பிட்ட கெமிக்கல் மூலம் பெண் உயிரணுக்களை அதாவது முட்டை செல்களை உருவாக்குகிறார்கள். இதன் மூலம் அதைக் கருவுறவும் செய்ய முடியுமாம்.
இது குறித்து அந்த ஆய்வாளர்கள் கூறுகையில், “பாலியல் குரோமோசோம் பிரச்சினையால் ஏற்படும் மலட்டுத்தன்மையைச் சரிசெய்யக்கூடிய வாய்ப்பை இது வழங்குகிறது. ஆண், பெண் என யாராக இருந்தாலும் இனப்பெருக்கம் செய்வதற்கான வாய்ப்பை இது வழங்குகிறது” என்று அவர் தெரிவித்தார்.
முக்கிய வெற்றி: முன்னதாக, அவரது குழு இரண்டு ஆண் எலிகளிடம் இருந்து செயற்கை வாடகைத் தாய் முறையில் குட்டி எலிகளை உருவாக்கியிருந்தனர். இந்த புதிய ஆய்வில் 630 கருக்களை அவர்கள் உற்பத்தி செய்த நிலையில், அதில் ஏழு மட்டுமே முழுமையான கருவாக வளர்ந்து பிறந்தது. இது குறைவு என்ற போதிலும், முதற்கட்ட ஆய்வு என்பதால் இது குறிப்பிடத்தக்க வெற்றி என்றே ஆய்வாளர்கள் கூறுகின்றனர். வரும் காலத்தில் இந்த ஆய்வு அடுத்த கட்டத்திற்குச் செல்லும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இந்த முறை ஒரு முக்கிய மைல்களாக இருக்கும் என்றும் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். ப்ளூரிபோடென்ட் ஸ்டெம் செல்கள் வழியாக உருவான கருக்களை ஒரு பெண்ணின் கருப்பையில் செலுத்துவதன் மூலம் இந்த ஆய்வை மனிதர்களிடமும் செய்ய வாய்ப்பு இருக்கிறது.
2028 ஆண்டு: 5, 6 ஆண்டுகளில், அதாவது 2028இல் மனிதர்களில் முட்டை போன்ற உயிரணு உற்பத்தியைச் செய்ய முடியும் என்றும் இந்த செயற்கை இனப்பெருக்க முறை கிளினிக்குகளில் பயன்படுத்தப் பாதுகாப்பானதா என்பதை உறுதிப்படுத்த 10-20 ஆண்டுகள் சோதனை தேவைப்படும் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதாவது 10 ஆண்டுகளில் சோதனை முயற்சியில் நம்மால் லேப்களில் மற்ற பொருட்களைப் போலக் குழந்தைகளையும் உற்பத்தி செய்ய முடியுமாம்.
இருப்பினும், இது எந்தளவுக்குச் சாத்தியம், இப்படி உருவாகும் குழந்தைகளுக்கு எதாவது பாதிப்பு இருக்குமா, அவர்களின் ஆயுள் எப்படி இருக்கும் என்பது குறித்து நாம் தெளிவான தகவல்களைத் தெரிந்து கொள்ளப் பல ஆண்டுகள் வரை காத்திருக்கவே வேண்டும்.