கர்நாடகா மாநிலம் பெங்களூரு என்றால் ஐடி நிறுவனங்களும், ஜில் ஜில் கிளைமேட்டும் தான் நினைவுக்கு வரும். குறிப்பாக ஏராளமான தமிழர்கள் இடம்பெயர்ந்து பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இதுதவிர படித்து முடித்து விட்டு வேலையில் சேர்ந்து பெங்களூருவில் வசிக்கும் தமிழ் இளைஞர்களும் இருக்கின்றனர். சென்னையை போலவே பலதரப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்திற்கு அடித்தளமாய் பெங்களூரு திகழ்கிறது.
பெங்களூரு நம்ம மெட்ரோ
இந்நகரம் வேகமாக வளர்ந்து வருவதை கருத்தில் கொண்டு கடந்த 2011ஆம் ஆண்டு மெட்ரோ ரயில் சேவை அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது கெங்கேரி முதல் பையப்பனஹள்ளி வரையிலான பர்பிள் லைன், நாகசந்திரா முதல் சில்க் இன்ஸ்டிடியூட் வரையிலான க்ரீன் லைன் என இரண்டு விதமான மெட்ரோ ரயில் சேவைகள் பயன்பாட்டில் இருக்கின்றன.
புதிய மெட்ரோ வழித்தடங்கள்
மேலும் ஆர்.வி.ரோடு முதல் பொம்மசந்திரா வரையிலான எல்லோ லைன், கலினா அக்ரஹாரா முதல் நாகவரா வரையிலான பிங்க் லைன், சில்க் போர்டு முதல் விமான நிலையம் வரையிலான ப்ளூ லைன் என மூன்று வழித்தடங்களில் பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் பர்பிள் லைன் மெட்ரோவில் இன்று (ஜூலை 4) காலை திடீரென ரயில் சேவை பாதிக்கப்பட்டது.
பயணிகள் தவிப்பு
இதனால் கெங்கேரி முதல் பையப்பனஹள்ளி இடையில் பயணிக்க காத்திருந்த பயணிகள் நீண்ட வரிசையில் சில மணி நேரங்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ரயில் பயணிகள் கூறுகையில், அரை மணி நேரமாக காத்திருந்தோம். அடிச்சு பிடிச்சு ரயிலில் ஏறுவதற்குள் போதும், போதும் என்றாகி விட்டது. பையப்பனஹள்ளி வரை செல்லும் வழித்தடத்தில் தான் அதிக சிரமங்கள் இருந்ததாக தெரிவித்தார்.
BMRCL விளக்கம்
என்ன பிரச்சினை? ஏன் மெட்ரோ ரயில் வரவில்லை? அதன்பிறகு தாமதமாக ஏன் வந்தது? எனப் பல்வேறு கேள்விகள் பயணிகளை துளைத்து எடுத்தது. இதுபற்றி பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனின் (BMRCL) மேலாண் இயக்குநர் கூறுகையில், பர்பிள் லைன் மின் விநியோகத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக சிக்னலிங் சிஸ்டம் சரியாக வேலை செய்யவில்லை.
காலை நேர ஷாக்
இதனால் சிக்கல் ஏற்பட்டது. வழக்கமாக காலை நேரங்களில் 19 ரயில்கள் பர்பிள் லைனில் இயக்கப்படும். ஆனால் யுபிஎஸ் பவர் சப்ளை பிரச்சினையால் சிக்னலிங் சிஸ்டத்தில் ஏற்பட்ட சிக்கலால் 4 ரயில்களை ரத்து செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
சில ரயில்கள் தாமதமாக இயக்கும் நிலைக்கு தள்ளப்பட்டோம். இதனால் மெட்ரோ ரயில் நிலையங்களில் கூட்டம் அதிகமாகி விட்டது. இதை கருத்தில் கொண்டு மெஜஸ்டிக் வரை குறுகிய தூர ரயில்களை அதிகமாக இயக்க திட்டமிட்டோம். காலை 10.30 மணியளவில் நிலைமை சரி செய்யப்பட்டு விட்டதாக கூறினார்.