சென்னை: காவிரியிலிருந்து தமிழகத்துக்கு ஜூன் மாதம் தர வேண்டிய 9.19 டிஎம்சி தண்ணீரை முழுமையாக கர்நாடக அரசு வழங்கவில்லை என்று தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை கோட்டூர்புரத்தில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது காவிரி நதிநீர் பங்கீடு மற்றும் மேகேதாட்டு விவகாரம் குறித்து கர்நாடக மாநில துணை முதல்வர் சிவக்குமார் பேச்சு குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் கூறியது: “உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, கர்நாடகம் தமிழகத்துக்கு சேர வேண்டிய தண்ணீரை ஜூன் மாதத்தில் வழங்கவில்லை. ஜூன் மாதத்தில், நமக்கு 9.19 டிஎம்சி தண்ணீர் கொடுத்திருக்க வேண்டும். ஆனால், வந்தது 2.833 டிஎம்சி தண்ணீர் மட்டும்தான். எனவே குறைவு எவ்வளவு என்று பார்த்தால் 6.357 டிஎம்சி.
காவிரி நதிநீர் பங்கீட்டு ஆணையம் கர்நாடகத்துக்கு அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்துக்கு தரவேண்டிய தண்ணீரை வழங்க வேண்டும் என்று கேட்கிறோம். கர்நாடக தரப்பு காரணங்களை அவர்கள் கூறுகின்றனர். நமது தரப்பு காரணங்களை நான் கூறுகிறேன்.
மேகேதாட்டு அணை விவகாரம் குறித்து பேசக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மத்திய ஜல்சக்தி துறை அமைச்சரும் அது தொடர்பாக பேசக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளார். கர்நாடக துணை முதல்வர் இந்த விவகாரம் குறித்து பேசட்டும், அதுபற்றி கவலையில்லை. நாங்கள் எங்களது தரப்பு காரண காரியங்களை சொல்வோம்” என்று அவர் கூறினார்.