செந்தில் பாலாஜி விவகாரத்தில் டெல்லியில் குட்டுப்பட்டாரா ஆளுநர்?!

சட்டவிரோத பணப் பரிமாற்றத் தடை சட்ட வழக்கில் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த ஜூன் 14-ம் தேதி கைது செய்த நிலையில், தற்போது அவர் சென்னை காவேரி மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையே, செந்தில் பாலாஜி வகித்து வந்த மின்சாரத்துறை தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை முத்துசாமிக்கும் பிரித்து வழங்கப்பட்டது. இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் என்று தமிழ்நாடு அரசு அறிவித்தது.

ஆர்.என்.ரவி, செந்தில் பாலாஜி, ஸ்டாலின்

செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார் என்று தமிழ்நாடு அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை ஜூன் 26-ஆம் தேதி விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், “செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பதில் தனக்கு விருப்பமில்லை என தெரிவித்துள்ள ஆளுநர், அமைச்சரை நீக்க வேண்டும் என எங்கே சொல்லியிருக்கிறார். இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பதை ஆளுநர் ஏற்கவில்லை என்பதற்கும், அவரை நீக்க உத்தரவிட்டார் என்பதற்கும் வித்தியாசம் உள்ளது” என்று கருத்து தெரிவித்திருந்தது.

இந்த சூழலில், செந்தில் பாலாஜி மீது வழக்குகள் இருப்பதை காரணம்காட்டி அதிரடியாக அவரை அமைச்சரவையில் இருந்து நீக்கினார் ஆளுநர் ஆர்.என். ரவி. இந்தியாவிலேயே ஒரு அமைச்சரை ஆளுநர் நீக்கியது இதுவே முதன்முறை ஆகும். ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க தலைவர்கள் கடுமையாக எதிர்வினை ஆற்றினர். தனது அதிகாரம் என்னவென்று தெரியாமலேயே ஆளுநர் ரவி செயல்பட்டு வருகிறார் என தி.மு.க-வினர் அவரை கடுமையாக விமர்சித்தனர்.

ஸ்டாலின்

இதனைத் தொடர்ந்து தான் பிறப்பித்த உத்தரவை அன்று நள்ளிரவே திடீரென நிறுத்தி வைத்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி. அதில் மத்திய உள்துறை அமைச்சகத்தையும் குறிப்பிட்டிருந்தார் ஆளுநர். இதனையடுத்து, முதல்வர் ஸ்டாலின் ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எழுதிய கடிதத்தில், “இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் என்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது. அரசமைப்புச் சட்டப்படி அமைச்சரை நீக்குவதற்கு ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது. ஆளுநர் கூறியுள்ள கருத்துகள் அரசியல் சாசனத்திற்கு எதிராக இருக்கின்றன. யாரை அமைச்சராக நியமிக்க வேண்டும் என்பது முதல்வரின் உரிமை. அமைச்சர் பொறுப்பில் புதிதாக ஒருவரை சேர்ப்பதும், நீக்குவதும் முதல்வரின் முடிவுக்கு உட்பட்டது. பதவிப் பிரமாணம் செய்து வைக்க மட்டுமே ஆளுநருக்கு உரிமை உள்ளது. முதல்வர் தலைமையின் கீழ் இயங்கும் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆளுநருக்கு உரிமை கிடையாது” என குறிப்பிட்டுள்ளார்.

தமிழக அரசியலை உற்று நோக்கும் அரசியல் ஆர்வலர்கள் சிலர், “அமைச்சரவையிலிருந்து செந்தில் பாலாஜியை நீக்குமாறு ஆளுநர் எழுதிய கடிதத்தில், `breakdown of the Constitutional machinery என்கிற வார்த்தைகள் இந்திய அரசியலமைப்பின் 356 வது பிரிவில் இடம் பெறுகின்றன. இது ஒரு மாநில அரசாங்கத்தை பதவி நீக்கம் செய்வது பற்றியது.’ போன்ற கடுமையான வார்த்தைகள் பயன்படுத்தியதால்தான் உடனடியாக இதில் உள்துறை தலையிட்டது. ஆளுநர் கடிதம் எழுதிய அன்று இரவே, திமுக தரப்பு கொதித்தது. அன்றே அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்திப்பதாக இருந்தார். எனினும், அடுத்த நாள் முதல்வர், அமைச்சர்களுடன் நடத்திய ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்தார் தங்கம் தென்னரசு.

அமித் ஷா – ஸ்டாலின்

மாநில அரசுக்கு எதிராக, அதுவும் கடுமையான, எச்சரிக்கும்படியான வார்த்தைகளை பயன்படுத்தி ஆளுநர் கடிதம் எழுதியதை டெல்லி மேலிடம் ரசிக்கவில்லை என்பது தெரிகிறது.

முதலமைச்சருக்கு தனிப்பட்ட முறையில் அறிவுறுத்தலாமே தவிர, அமைச்சரவை நீக்கம் தொடர்பக அரசியலமைப்பு சட்டப்படி ஆளுநருக்கு எந்த ஒரு அதிகாரமும் இல்லாத நிலையில் ஏன் அவர் அதில் தலையிட வேண்டும். ஆளுநரின் வேலை அரசியலமைப்பு சட்டத்தை நிலைநிறுத்துவதுத்தான். கட்சிகளிடம் சண்டை போடுவதில்லை. இப்படியே தொடர்ந்தால் ஆளுநரை திரும்ப பெறுவது தவிர பா.ஜ.க-வுக்கு வேறுவழியில்லை. ஏனென்றால், ஆளுநரின் ஒவ்வொரு செயலின் மூலம் தமிழக பா.ஜ.க பலவீனமடைகிறது என்பதையும் தேசிய தலைமை நினைவில் கொள்ள வேண்டும் என இங்கிருப்பவர்கள் நோட் அனுப்பினார்கள்.

எனவே இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது டெல்லி தலைமை ஆளுநரிடம் கடுமையாக நடந்து கொண்ட பிறகே அவரின் நடவடிக்கைகளில் சில மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம்” என்கிறார்கள்.

நிலைமை இவ்வாறு இருக்க, ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயலுக்கு பின்னால் மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசே காரணமாக இருக்கிறது என்கிற விமர்சனம் முன் வைக்கப்படுகிறது. இது தொடர்பாக நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் பிரியன், “தமிழ்நாட்டில் ஆளும் கட்சிக்கு என்னென்ன விஷயங்களில் தர்மசங்கடங்களை ஏற்படுத்த முடியுமோ, அத்தனை செயல்களையும் பா.ஜ.க-வின் அழுத்தத்தால் ஆளுநர் தொடர்ந்து செய்து வருகிறார். அதன்படி மாநில அரசாங்கம் எழுதி கொடுத்த விஷங்களை சட்டமன்றத்தில் பேசாதது, தமிழ்நாடு – தமிழகம், திரவிடம் என்பது இல்லவே இல்லை, சனாதனம்.. என தொடர்ந்து பல விஷயங்களை பேசுகிறார்.

ப்ரியன்

இப்போது செந்தில் பாலாஜி விவகாரத்தில், அரசியலமைப்பின் அடிப்படை புரிதல் இல்லாமல் அவசரப்பட்டு ஒரு முடிவெடுத்தார். அதற்கு பல தரப்பில் எதிர்மறையான விமர்சனங்கள் வரும் போது, ஏதோ மத்திய பா.ஜ.க அரசு நடுநிலையாக, ஜனநாயக ரீதியாக, நியாயமாக இருப்பது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்துவதற்காக உள்துறை மற்றும் அட்டார்னி ஜெனரலின் ஆலோசனைக்கு பிறகு முடிவெடுப்பேன் என்கிறார். ஆளும் அரசுக்கு எதிராக தொடர்ந்து பல்வேறு விஷயங்களை முன்னெடுக்கும் ஆளுநர், ஏன் அ.தி.மு.க அமைச்சர்கள் மீது வழக்கு தொடுப்பதற்கு அனுமதி கொடுக்காமல் வைத்திருக்கிறர்.

மணிப்பூர் அங்கு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. அதை பற்றி பேசவில்லை. அங்கு ஆட்சி கலைப்பது, ஜனாதிபதி ஆட்சி கொண்டுவருவது பற்றி எந்த பேச்சும் இல்லை. தமிழ்நாட்டில் கான்ஸ்டியூசன் பிரேக்டவுன் பற்றி பேசுகிறார் என்றால் மத்திய அரசு சொல்லாமலா பேசுகிறார். அவர் செய்யும் செயல், பேசும் பேச்சு எல்லாமே மத்திய பா.ஜ.க அரசின் பிரதிநிதி போல் செய்து வருகிறார். பா.ஜ.க-வின் நோக்கம் வரும் தேர்தலுக்குள் தி.மு.க-வை பலவீனப்படுத்த வேண்டும். அதை நோக்கி ஆளுநர் போய் கொண்டிருக்கிறார்.

மணிப்பூர்

அதேநேரத்தில், முதல்வருக்கும் இலாகா இல்லாத அமைச்சராக வைத்துக் கொள்ள உரிமை இருந்தாலும் கூட தார்மீக ரீதியாக செந்தில் பாலாஜியை வைத்து கொள்வது குறித்து யோசிக்க வேண்டும். கட்சி ரீதியாக எவ்வளவு ஆதரவு வேண்டுமானும் கொடுங்கள். ஆனால், அரசு ரீதியாக பார்க்கும் போது தார்மீகமாக சரியில்லை. ஸ்டாலின் செந்தில் பாலாஜியை விடுவித்தால் இன்னும் ஸ்டாலினின் இமேஜ்தான் உயரும். ஊழல்வாதி ஒருவரை அருகில் வைத்து கொண்டிருப்பதை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து சொல்லி கொண்டே இருப்பார்கள். இந்த மாதிரி கெட்டபெயர் வரும் நிலையில், எதற்கு வைத்து கொள்ள வேண்டும்?” என்கிறார்.

“அவர்கள் செய்த ஊழல் அரசியலை மறைப்பதற்கே இது போன்ற மடைமாற்றம்” என்கிறார் பா.ஜ.க, மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி. தொடர்ந்து பேசியவர், “இந்த பிரச்னையின் ஆணிவேர், நடத்துநர் வேலைக்காக மூன்று லட்சம் பெற்று கொண்டு பல நபர்களிடம் மோசடி செய்தது மிக மிக கீழ்த்தரமான விவகாரம். வாங்கி கொண்டதை ஒப்பு கொண்டு திருப்பிக் கொடுத்துவிட்டேன் என்று சொன்னதெல்லாமே குற்றத்தை செய்ததோடு மட்டுமல்லாமல், மக்களை அவமானப்படுத்திய செயலும் கூட. அந்த ஒரு இழிவான செயல் செய்ததை மூடி மறைப்பதற்காக, நியாமாக நீதியின் முன்பு நிறுத்த வேண்டிய முயற்சிகளை மேற்கொள்ளும் போதும், தண்டிக்க முற்படும் போதும் அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி அதை அழுத்த நினைப்பது மிகவும் கண்டிக்கத்தக்க செயல்.

நாராயணன் திருப்பதி

இந்த விவகாரத்தில் செந்தில் பாலாஜி செய்திருக்கும் லஞ்ச லாவண்யங்கள், முறைகேடுகள், ஊழல்கள் குறித்து பேசாமல் ஆளுநர் குறித்தும், கடித போக்குவரத்துக் குறித்தும் பேசுவது தவறு என்று நினைக்கிறேன். இதுநாள் வரை இருந்து வந்த மரபு, இது போன்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் போது அவர்களாகவே உடனடியாக விலகிவிடுவார்கள். இதற்கு பல உதராணங்களை ஸ்டாலின் அவர்களே சுட்டி காட்டியிருக்கிறார். இப்போது ஏன் அவர்களுக்கு இதை எதிர்கொள்ள திராணி , தெம்பு இல்லையா… ஏன் இப்படி ஜனநாயக படுகொலை செய்கிறார்கள்?” என்கிற கேள்வியினை முன் வைக்கிறார் நாராயணன் திருப்பதி.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.