ஜூலை 14 ஆம் தேதி சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘மாவீரன்’ திரைப்படம் வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்தில் அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார்.
‘மாவீரன்’ திரைப்படத்தின் இயக்குநர் மடான் அஸ்வின், சமீபத்தில் சினிமா விகடன் யூ-ட்யூப் சேனலுக்கு பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் பகிர்ந்து கொண்ட சில சுவாரஸ்யமான விஷயங்கள் இதோ!
இந்தப் படத்தில் வரும் சிவகார்த்திகேயன் லுக்கில், ரஜினி சாரின் சாயல் தெரிகிறது. படத்தின் தலைப்பும் ரஜினி சார் நடித்த ‘மாவீரன்’ தான். இதற்கு ஏதேனும் காரணம் உள்ளதா?
இந்த படத்தில் சிவகார்த்திகேயன் சாருக்கு வித்தியாசமான லுக் வேண்டுமென நினைத்தோம். ரஜினி சாரின் லுக்கைப் போல, ஃபங்க் ஹேர் ஸ்டைலில் இருந்தால் நன்றாக இருக்கும் எனத் தோன்றியது. இதைப் போல, பல ஐடியாக்களும் இருந்தது. ஆனாலும் இந்த லுக், எங்களுக்கும் சிவகார்த்திகேயன் சாருக்கும் பிடித்துவிட்டது. அதனால், இந்த லுக்கையே தேர்வு செய்துவிட்டோம். ‘தளபதி’ படத்தில் வரும் ரஜினி சாரின் லுக்தான், இந்த லுக்கிற்கு அடிப்படை. இதே லுக்கை, இவருக்கு எப்படி கொண்டு வர முடியும் என்பதைப் பார்த்துத் தேர்வு செய்தோம். இந்த லுக் தான் வேண்டும் என்பதற்காக தேர்வு செய்யவில்லை. லுக்கிற்காக நிறைய ஐடியாக்கள் இருந்தது. அதில் இந்த லுக் சுவாரஸ்யமாக இருந்ததால் இதையே தேர்ந்தெடுத்து விட்டோம். அதேபோல, ‘மாவீரன்’ தலைப்பும் கதையுடன் தொடர்புடைய ஒரு விஷயம். படம் பார்க்கத் தொடங்கிய ஐந்து நிமிடத்தில் இதற்கான காரணம் தெரிந்துவிடும்.
உங்களுடைய முதல் படம், கிராமம் சார்ந்த கதைக்களம். இந்த படம் நகரம் சார்ந்த கதையாக இருக்கிறது. இந்த இரண்டு கதைகளின் மூலம் உங்களின் ஸ்ட்ராங் ஏரியா எது?
இல்லை, இரண்டிலுமே எனக்கு அனுபவங்கள் அதிகமாக இருக்கிறது. என்னுடைய ஊர், ‘புத்தன்துறை’ என்கிற கடற்கரை கிராமம். நான் சிறு வயதிலிருந்து வளர்ந்தது எல்லாமே கிராமம் தான். இந்த கிராமத்து வாழ்க்கையைப் பற்றி எனக்குத் தெரியும். அதற்குப் பிறகு, சென்னை MIT கல்லூரியில் படித்தேன். பெங்களூரில் வேலை செய்தேன். இதனால், நகரத்து வாழ்க்கையைப் பற்றியும் தெரியும். குறிப்பிட்டு ‘இதத்தான் பண்ணுவேன்’ என்று இல்லை. எந்த கதைக்களமாக இருந்தாலும் அதைப்பற்றி ஆய்வு செய்தால், சிறப்பாக செய்ய முடியும் என்று தோன்றுகிறது. ஒரு பகுதியில் உள்ள மக்களின் வாழ்க்கை முறை, அன்றாட வாழ்வியல் பற்றித் தெரிந்து கொண்டால், எந்த கதைக்களத்திலும் நன்றாகப் படம் எடுக்க முடியும்.
‘மாவீரன்’ படத்தை முடித்துவிட்டீர்கள். இந்தப் படத்திலிருந்து நீங்கள் எடுத்துக் கொண்ட விஷயம் எது?
‘மாவீரன்’ திரைப்படம் மேக்கிங், பட்ஜெட் என அனைத்திலுமே பெரிய படம். என்னுடைய முந்தைய படத்துடன் ஒப்பிடுகையில், இது மொத்தமாகவே பெரிய படம் தான். இந்த படத்தில் நிறைய ஆர்டிஸ்ட்களுடன் பணிபுரியும் போது, அவர்களுக்கான ஷூட்டிங் நேரத்தைத் திட்டமிட்டு சரியாகக் கொண்டு வர வேண்டும். ‘செலவுகள் அதிகமாக செய்யும்போது, எதையுமே சொதப்பாமல் அனைத்தையும் எப்படி சரியாக செய்ய வேண்டும்’ என்பது எல்லாமே திட்டமிடுதலில் தான் இருக்கிறது. ‘சிறிய படமாக இருந்தாலும், ‘மாவீரன்’ மாதிரியான பெரிய படமாக இருந்தாலும், திட்டமிடுதல் சரியாக இருக்கும் பட்சத்தில் எல்லாவற்றையும் சிறப்பாக செய்ய முடியும்” இதுதான் நான் கற்றுக் கொண்ட பாடம்.
லோகேஷ் கனகராஜ், ரத்னகுமார், ஶ்ரீ கணேஷ், நித்திலன், கார்த்திக் யோகி உள்பட நீங்கள் அனைவரும் ஒரு கேங். உங்களின் கேங்கைப் பற்றி சொல்லுங்கள்?
நாங்கள் எல்லோருமே நண்பர்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் இணைந்த நண்பர்கள் தான். நித்திலன், கார்த்திக் யோகி இவர்கள் இருவரும் ‘நாளைய இயக்குநர்’ மூலமாக பழக்கமானவர்கள். எடிட்டர் பிலோமின் ராஜ், லோகேஷின் ஷார்ட் பிலிமை எடிட் செய்தார். நான் ஷார்ட் ஃபிலிம் எடுக்கும் போது, எடிட்டர் பிலோமின் ராஜ் மூலமாக லோகேஷ் எனக்கு பழக்கமானார். நாங்கள் எல்லோருமே படம் எடுக்க முயற்சித்துக் கொண்டிருந்தோம். அப்போது, லோகேஷ் தான் முதலில் படம் எடுத்தான். அதற்காக, நாங்கள் எல்லோரும் எங்களால் முடிந்த சிறு சிறு உதவிகளை செய்தோம். இப்படித்தான், எங்களுக்குள் பத்து வருட பழக்கம். நான், கார்த்திக் யோகி எல்லோருமே ரூம் மேட்ஸ். லோகேஷ் அடிக்கடி எங்கள் ரூமுக்கு வருவான். வரும் போதெல்லாம், சினிமா பற்றி தான் பேசுவோம். லோகேஷ், தளபதி விஜய்யை வைத்து படம் எடுக்கிறான் என்பதே எங்களுக்கு பயங்கரமான ஹேப்பி நியூஸ். இன்றும் நாங்கள் எல்லோரும் தொடர்பில் இருக்கின்றோம்.
லோகேஷ் கனகராஜுக்கு ‘மாவீரன்’ படத்தின் கதையைப் பற்றித் தெரியுமா?
இல்லை. இந்த ‘மாவீரன்’ படத்தின் ஸ்கிரிப்டை லோகேஷ் படிக்கவில்லை. அதற்கான நேரமும் இல்லை. ஒரே ஒரு சீன் மட்டும் காண்பித்தேன். ‘சூப்பரா இருக்கு டா! செம்மையா இருக்கு!’ என்று சொன்னான். திரும்பி இரண்டு நாள் கழித்து ஃபோன் பண்ணி, அந்த சீனை இன்டர்வெல்லில் வைக்கச் சொன்னான். நான், “அந்த சீன் இன்டர்வெல் முடிஞ்ச பிறகு வருது. இன்டர்வெல்ல வைக்க முடியாது” என சொல்லிவிட்டேன். லோகேஷ் பிஸியாக இருப்பதால், முழு கதையையும் சொல்ல முடியவில்லை. அவனுக்கும் நேரமில்லை, நாங்களும் அதே சூழலில் தான் இருந்தோம்.