பாஜக தேசிய தலைமை முக்கியமான ஓர் அறிவிப்பை சற்றுமுன் வெளியிட்டுள்ளது அதன்படி, தெலங்கானா மாநில பாஜக தலைவராக ஜி.கிஷன் ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது மத்திய சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டுத் துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார். செகந்திராபாத் தொகுதியில் இருந்து தான் எம்.பியாக வெற்றி பெற்று நாடாளுமன்றத்திற்கு கிஷன் ரெட்டி தேர்வு செய்யப்பட்டிருந்தார்.
பாஜக மாநிலத் தலைவர்கள் மாற்றம்
இதையடுத்து ஆந்திர மாநில பாஜக தலைவராக டி.புரந்தேஷ்வரியும், ஜார்க்கண்ட் மாநில பாஜக தலைவராக முன்னாள் முதலமைச்சர் பாபுலால் மராண்டியும், பஞ்சாப் மாநில பாஜக தலைவராக சுனில் ஜாகரும், தெலங்கானா மாநில தேர்தல் மேலாண்மை குழு தலைவராக ஈடாலா ராஜேந்திரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஜார்க்கண்டில் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் பாபுலால் மராண்டிக்கு மாநில கட்சி தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
ஜார்க்கண்ட்டில் பாஜக
இவர் தான் அம்மாநிலத்தில் பாஜக வேரூன்ற முக்கிய காரணமாக இருந்தவர். எனவே மக்களவை தேர்தலை ஒட்டி இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. இதுதொடர்பாக அறிவிப்பை பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வெளியிட்டிருக்கிறார். மேற்குறிப்பிட்ட நடவடிக்கையின் மூலம் இரண்டு விதமான கேள்விகள் எழுகின்றன. ஒன்று, அமைச்சரவையில் மாற்றம் வரப் போகிறதா?
பாஜக வகுத்த வியூகம்
இரண்டு, 2024 மக்களவை தேர்தலுக்கு பாஜக தயாராகிறதா? இதுபற்றி டெல்லி வட்டாரத்தில் விசாரிக்கையில், மக்களவை தேர்தலுக்கான பணிகளை பாஜக கட்சி ரீதியில் மேற்கொள்ள ஆரம்பித்து விட்டது. குறிப்பாக தெலங்கானாவில் பாஜகவின் வெற்றி என்பது மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. தற்போது ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் தெலங்கானாவில் சூறாவளி பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
மக்களவை தேர்தல் களம்
மறுபுறம் ஆளும் பாரதிய ராஷ்டிர சமிதி கட்சியும் தேர்தல் தொடர்பான பணிகளில் மும்முரம் காட்டி வருகிறது. எனவே பாஜகவும் உஷாராக களப் பணிகளை முடுக்கி விட்டுள்ளது. அந்த வகையில் கிஷன் ரெட்டியின் நியமனம் அம்மாநில பாஜகவிற்கு உத்வேகம் அளிப்பதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தெலங்கானா மாநிலத்தில் பாஜக வளர்ந்து வரும் கட்சியாக பார்க்கப்படுகிறது. வரும் மக்களவை தேர்தலில் தனித்து போட்டியிட அதிக வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.
மத்திய அமைச்சரவையில் மாற்றம்
இதையொட்டி உரிய முன்னேற்பாடுகளை பாஜக களமிறக்கி விட்டுள்ளது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், கட்சி ரீதியில், தேர்தல் ரீதியில் ஒரு பொறுப்பு வழங்கப்படும் போது பணிச் சுமை அதிகரிக்கும். தற்போதைய சூழலில் மக்களவை தேர்தல் என்பது மிகவும் முக்கியம். எனவே மத்திய அமைச்சர் பதவியை வேறு ஒருவருக்கு அளித்தால் தான் கிஷன் ரெட்டியின் செயல்பாடுகள் வேகமெடுக்கும்.
அப்படி பார்த்தால் மத்திய அமைச்சரவையில் மாற்றம் வருகிறதோ? என்ற கேள்வி எழுகிறது. தெற்கில் பாஜக வளர வேண்டும் என்று அக்கட்சி தலைமை விரும்புகிறது. இதுவும் மேற்குறிப்பிட்ட மாற்றங்களுக்கு ஒரு காரணமாக இருக்கலாம் எனக் கூறுகின்றனர்.